தேனி மாவட்டம் கூடலூரில் உள்ள கர்ணம் பழனிவேல் பிள்ளை தெருவில் வசித்து வருபவர் நந்தகோபால்(42). சித்த மருத்துவராக உள்ள இவரது, வீட்டில் சட்டவிரோதமாக விலங்குகளின் உறுப்புகள் பதுக்கி வைத்திருப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் கம்பம் கிழக்கு வனச்சரகர் அருண்குமார் தலைமையிலான வனத்துறையினர், சித்த மருத்துவரின் வீட்டில் சோதனை நடத்தினர்.
அதில், அவரது வீட்டில் இருந்த காய்கறி பையின் உள்ளே இரண்டு மான் கொம்புகள், யானை தந்தம் சிறியது, புலி நகம் இரண்டு, மயில் தோகைகள் ஆகியவை பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டன. இதையடுத்து மான்கொம்பு, யானை தந்தம், புலி நகத்தை கைப்பற்றிய வனத்துறையினர் சித்த மருத்துவர் நந்தகோபாலை கைது செய்து சட்டவிரோதமாக வன விலங்குகளின் உறுப்புகளை பதுக்கி வைத்திருந்த குற்றத்திற்காக வனச்சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.