வேளாண் பூமியான தமிழ்நாட்டில் கதிர் அரிவாளின் பங்கு மிக முக்கியமானது. நெற்கதிர்கள், தேயிலைப் பயிர்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு கதிர் அரிவாள்கள் தேவைப்படுகிறது.
'கதிர் அரிவாள்' எனப்படும் பண்ணை அரிவாள், தேனி மாவட்டம் பூதிப்புரம் அருகே உள்ள வாழையாத்துப்பட்டி கிராமத்தில் பாரம்பரியமாக தயாரிக்கப்படுகிறது.
'கச்சப்பட்டை' எனும் இரும்பு உலோகத்தால் செய்யப்படும் 'கதிர் அரிவாள்கள்' தரம் உயர்ந்ததாகவும், சிறப்பாகவும் இருப்பதால் தமிழ்நாடு மட்டுமின்றி அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும் இங்கிருந்துதான் அனுப்பப்படுகின்றது.
திண்டுக்கல், புதுக்கோட்டை பகுதியில் உள்ள தைல, யூகலிப்டஸ் மரக்கட்டைகளை வரவழைத்து கைப்பிடிகள் தயாரிக்கப்படுகிறது. கைப்பிடி கட்டைகளுக்கு வர்ணம் பூச திருநெல்வேலியிலிருந்து அரக்கு கிலோ ஆயிரத்திற்கு வாங்கப்படுகிறது.
நெருப்பு மூட்டி, இரும்பு அடிக்க, அருப்புக்கோட்டையிலிருந்து கரிக்கட்டைகள் ஒரு மூடை ஆயிரத்திற்கு வாங்கப்படுகிறது. இப்படி சிறு சிறு விஷயங்களுக்குக்கூட சமரசம் செய்யாமல், பாரம்பரியமாக இத்தொழிலை திறம்பட செய்துவருகின்றனர், வாழையாத்துப்பட்டி ஊர்வாசிகள்.
உயரம் வடிவத்திற்கு ஏற்ப இரும்புத் தகடை துண்டு செய்தல், அடுப்பு மூட்டி ராடு அடித்தல், வடிவத்தைக் கொண்டுவருதல், அரிவாளின் வாய்ப்பகுதியை ராவுதல், பல் கட்டிங் செய்தல், காம்பு பகுதியை வடித்தல், மர கைப்பிடி சேர்த்தல் என பலகட்ட வேலைகளுக்குப் பின்னரே ஒரு கதிர் அரிவாள் முழுமை பெறுகிறது.
'என்னது! ஒரு கதிர் அறுவால் தயாரிக்க இவ்வளவு மெனக்கெடலா' என்று உங்களுக்குத் தோன்றலாம். ஆனால், இவ்வளவு மெனக்கெட்டால்தான், ஒரு அரிவாள் விற்றால் 50 முதல் 350 ரூபாய் வரை, இத்தொழிலாளர்களுக்குக் கிடைக்கிறது.
இது தவிர, வெட்டு அரிவாள், இறைச்சி வெட்டும் கத்தி, மண்வெட்டி, அரிவாள் மனை, சாம்பிராணி கரண்டி உள்ளிட்டவைகளும் தயாரிக்கப்படுகின்றன. கடந்த பத்தாண்டுகளுக்கு முன்பு வரை, இங்கு 100 அரிவாள் தயாரிப்புப் பட்டறைகள் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தன. ஆனால், தற்போது குறைவான பட்டறைகளே வாழையாத்துப்பட்டியில் இயங்குகின்றன.
ஏற்கெனவே அழிவின் விளிம்பு நிலையில் உள்ள இந்தத் தொழில், தற்போதுள்ள ஊரடங்கால் மேலும் முடங்கியுள்ளது. போக்குவரத்து, உள்ளூர் சந்தை மூடப்பட்டதால் ரூ.25 லட்சம் மதிப்புள்ள பொருள்கள் தேக்கமடைந்துள்ளது.
வாரத்தில் ஆறு நாள்கள், ஒரு பட்டறையில் 25 பேர் பணிபுரிந்த இடத்தில், தற்போது 5 முதல் 6 பேர் மட்டுமே பணிபுரிய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அவர்களுக்குக்கூட ஊதியம் வழங்க முடியாத நிலையில், பட்டறை உரிமையாளர்கள் உள்ளனர்.
ஊரடங்கில் விவசாயம் சார்ந்த பணிகளுக்குத் தடை ஏதும் இல்லை எனக்கூறும் அரசு, விவசாயத்திற்குப் பயன்படும் கதிர் அரிவாள்கள் விற்பனை மற்றும் போக்குவரத்திற்கு அனுமதி வழங்கி, வாழ்வாதாரம் காத்திட வேண்டும் என்பதே கதிர் அரிவாள் தயாரிப்பு தொழிலாளர்களின் கோரிக்கையாக உள்ளது.
இதையும் படிங்க:ஊரடங்கால் பொலிவிழந்த பித்தளைப் பாத்திரத் தொழில்!