தேனி மாவட்டம் கம்பத்திலுள்ள பல்வேறு இடங்களில் இருசக்கர வாகனங்கள் திருடு போனது தொடர்பாக அதன் உரிமையாளர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர்.
அதனடிப்படையில் கம்பம் வடக்கு காவல் ஆய்வாளர் சிலைமணி தலைமையில் தனிப்படை அமைத்து திருடர்களை பிடிப்பதற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய்சரண் தேஜஸ்வி உத்தரவிட்டார்.
இதையடுத்து, தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர், இன்று (அக்.26) கம்பம் மணிக்கட்டு ஆலமரம் பகுதியில் சந்தேகத்திற்கிடமாக இருசக்கர வாகனத்தில் சுற்றித் திரிந்த இளைஞரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், அவர் கம்பம் சுவாமி விவேகானந்தர் தெருவைச் சேர்ந்த மொக்கைப்பாண்டியன் மகன் அஜித்குமார்(22) என்பதும், கம்பத்தில் பல்வேறு இடங்களில் இருசக்கர வாகனங்களை திருடி வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து, அஜித் குமாரிடமிருந்து நான்கு இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்த காவல் துறையினர், அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.