தேனி: மனிதன் வாழ்வதற்குத் தேவையான அடிப்படை தேவைகளுள் ஒன்று தண்ணீர். அப்படிப்பட்ட தண்ணீரைப் பல இடங்களில் நாம் வீணாக்கிக்கொண்டுள்ளோம். ஆகையால் பல்வேறு இடங்களில் தண்ணீர் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. நிலத்தடி நீரின் அளவும் குறைந்து வருகிறது. அதனால் நாம் அனைவரும் இயற்கை அளிக்கும் தண்ணீரான மழை நீரை சேமிக்கும் முக்கிய பொறுப்பில் இருக்கின்றோம்.
அதுமட்டுமின்றி நமது வருங்கால சந்ததிக்கு தேவையான தண்ணீரையும் சேர்த்து இப்போது இருந்தே சேமிக்கும் கட்டாயத்திலும் உள்ளோம். இல்லையென்றால், இனிவரும் காலங்களில் தண்ணீர் தட்டுப்பாடு அதிகளவில் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளது. இதற்காகத் தமிழ்நாடு அரசும் 2000 - 2002 ஆம் ஆண்டில் நிலவிய வறட்சியைக் கணக்கில் கொண்டு, மழை நீர் சேமிப்பு திட்டத்தை அறிமுகப்படுத்தியது. அந்த திட்டத்தைக் கட்டாயமாக்கச் சட்டமும் கொண்டுவந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தமிழ்நாடு அரசின் உத்தரவின் பெயரில், பள்ளி மாணவர்கள் மூலமும் பொதுமக்களுக்கு மழைநீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாகச் சுழற்சி முறையில் தனியார் பள்ளிகள் மற்றும் அரசு பள்ளி மாணவர்கள் பொதுமக்களிடையே மழைநீர் சேமிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.
அந்த வகையில், தேனி மாவட்டம் உத்தமபாளையம் பகுதியில் அமைந்துள்ள தனியார்ப் பள்ளி மாணவர்கள் சார்பாக, சின்னமனூர் பகுதியில் நீர் மேலாண்மை குறித்த விழிப்புணர்வைப் பொதுமக்கள் மத்தியில் உண்டாக்கும் விதமாக நீர் மேலாண்மை குறித்த கோஷங்கள் எழுப்பியபடி சுமார் 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் ஊர்வலமாக சென்றனர். தற்போது அடிக்கடி பருவநிலை மாற்றம் ஏற்படுவதால், போதிய அளவு மழைப்பொழிவு இல்லாமல் காணப்படுகிறது.
ஆகையால் பொதுமக்கள் மத்தியில் நீர் மேலாண்மை மற்றும் தண்ணீரை சேமிப்பதற்கான ஆர்வம் குறைந்து வருகிறது. இந்நிலையில், தண்ணீரை சேமிப்பதற்கு பொதுமக்கள் முயற்சி எடுப்பதற்கும், மழை நீர் சேமிப்பு திட்டத்தை செயல்படுத்துவதற்கும், தண்ணீரை சேமிக்காமலும், சரியான நீர் மேலாண்மை திட்டத்தை செயல்படுத்தத் தவறினாலும் உண்டாகும் விளைவுகள் குறித்து பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக பள்ளி மாணவர்கள் சின்னமனூர் பகுதியில் ஊர்வலமாகச் சென்றனர்.
மாணவர்கள் செல்லும் வழியெங்கும் நீர் மேலாண்மை குறித்த "சேமிப்போம்.. சேமிப்போம்... மழை நீரை சேமிப்போம்" என்ற கோஷங்களுடன், கையில் நீர் மேலாண்மை குறித்த பதாகைகளை ஏந்தியபடியும், சின்னமனூர் எரசை பிரிவில் ஊர்வலத்தை தொடங்கி சின்னமனூர் நகரில் முக்கிய வீதிகளில் சுமார் 3 கிலோ மீட்டர் ஊர்வலமாக சென்று பின்னர் சின்னமனூர் காவல் நிலையம் அருகே ஊர்வலத்தை நிறைவு செய்தனர்.
இதையும் படிங்க: திடீரென பெய்த கனமழை.. சாலை எங்கிலும் ஓடிய மழை நீர்..!