தேனி மாவட்டம் குச்சனூர் கிராமத்தில் சுரபி நதிக்கரையில் சனீஸ்வர பகவான் கோயில் அமைந்துள்ளது. இங்கு சனீஸ்வர பகவான் சுயம்புவாக எழுந்தருளியுள்ளார்.
இதனால் இக்கோயிலுக்கு தமிழ்நாடு முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இத்திருக்கோயிலில், சனிப்பெயர்ச்சி உள்ளிட்ட விழாக்கள் சிறப்பாக நடைபெறும்.
இந்நிலையில் நாளை (டிச.27) அதிகாலை 5:22 மணிக்கு தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு சனீஸ்வர பகவான் இடம் மாறுகிறார். இதற்காக கோயில் நிர்வாகம் சார்பில் சனிப்பெயர்ச்சி விழா நேற்று (டிச.25) கணபதி ஹோமத்துடன் தொடங்கியது.
இன்று (டிச.26) சனீஸ்வர பகவானுக்கு சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றன. நாளை அதிகாலை 3:00 மணிக்கு வேதிகார்ச்சனையும், 5:22 மணிக்கு மூலவருக்கு மகா தீபாராதனையும், உற்சவருக்கு அபிஷேக அலங்காரமும் நடைபெற உள்ளது.
மேலும் மிதுனம், கடகம், துலாம், தனுசு, மகரம், கும்பம் ஆகிய பரிகார ராசிகாரர்களுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறயுள்ளன. கரோனா தொற்று பரவல் காரணமாக அரசு பிறப்பித்த அறிவுறுத்தலின்படி பக்தர்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள்.
பக்தர்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். குறிப்பாக 10 வயதிற்கு கீழ் உள்ளவர்கள், 65 வயதிற்கு மேல் உள்ளவர்களுக்கு அனுமதி கிடையாது என கோயில் செயல் அலுவலர் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: திருநள்ளாறு சனிப்பெயர்ச்சி விழாவில் பங்கேற்க கோவிட்-19 பரிசோதனை கட்டாயம்