நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளையில் தேர்தல் பரப்புரையை தொடங்கிய திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினை இன்று (நவம்பர் 20) காவல்துறையினர் கைது செய்தனர். அதை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக, தேனியில் திமுக வடக்கு மாவட்ட பொறுப்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் தலைமையில் 50க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தேனி பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள நேரு சிலை மும்முனை சந்திப்பில் சாலையில் அமர்ந்து, உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். 20 நிமிடங்களுக்கு மேலாக தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட தங்க தமிழ்ச்செல்வனிடம் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியும் போராட்டத்தை கைவிடவில்லை.
அதன் பிறகு உதயநிதி ஸ்டாலினை திருக்குவளை காவல்துறையினர் விடுதலை செய்த தகவல் வந்ததை தொடர்ந்து, போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்துச் சென்றனர். நகரின் மையப்பகுதியில் நடத்திய திமுகவினரின் சாலை மறியலால் கடுமையாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.