மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட மக்களின் விவசாயத்திற்கும் மற்றும் குடிநீர் ஆதாரமாக முல்லைப்பெரியாறு அணை திகழ்ந்து வருகிறது. இந்த அணையின் தமிழ்நாடு மற்றும் கேரளாவில் உள்ள நீர்ப்பிடிப்புப்பகுதிகளில் பெய்து வந்த கனமழையால் முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் கடந்த நாளுக்கு நாள் நீர்மட்டம் உயர்ந்து வந்த நிலையில், முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 136 அடியை எட்டியுள்ளது.
உச்ச நீதிமன்ற தீர்ப்புக்குப்பின் முல்லைப் பெரியாறு அணை 7ஆவது முறையாக 136 அடியை கடந்ததால், தமிழ்நாட்டில் உள்ள ஐந்து மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நேற்று(ஆக.04) காலை விநாடிக்கு 6,143 கனஅடியாக இருந்த நீர்வரத்து, இன்று(ஆக.05) 7201 கனஅடியாக அதிகரித்தது. இதனால், நீர்மட்டம் 137.05 அடியானது.
ரூல்கர்வ் (Rule Curve) அட்டவணைப்படி ஆகஸ்ட் 1 முதல் ஆகஸ்ட் 10 வரை அணையில் 137.50 அடி வரை தண்ணீர் தேக்கமுடியும். தற்போது அணையிலிருந்து தமிழ்நாட்டுப்பகுதிக்கு விநாடிக்கு 2016 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. அணையின் இருப்புநீர் 6,357 மில்லியன் கன அடியாகும்.
2014இல் முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி நீர்த்தேக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட பின்பு, கடந்த 2014ஆம் ஆண்டு தொடங்கி தற்போது 7ஆவது முறையாக நீர்மட்டம் 136 அடியைக் கடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ச்சியாக நீர்மட்டம் அதிகரித்து வருவதனால் இடுக்கி மாவட்டத்திற்கு முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் அடுத்த 4 நாட்களுக்கு தொடர்ந்து அதிதீவிர கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால், முல்லைப்பெரியாறு அணைக்கு வரும் நீர்வரத்து தொடர்ச்சியாக அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், முல்லைப்பெரியாறு அணையில் இருந்து நீரைத் திறக்கக்கோரி தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினுக்குக் கடிதம் எழுதியுள்ளார். முல்லைப்பெரியாறு அணை 137 அடியைக் கடந்த நிலையில் படிப்படியாக நீரை இப்போதிலிருந்து திறக்க வேண்டும்.
தண்ணீரைத் திறக்கும் 24 மணிநேரத்துக்கு முன்னர் அறிவிப்பு கொடுக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதைத்தொடர்ந்து தமிழ்நாடு அரசு முல்லைப்பெரியாறிலிருந்து கேரளாவுக்கு ரூல் கர்வ்(Rule Curve) அட்டவணைப்படி முதல்கட்டமாக தண்ணீர் திறந்துள்ளது.
தற்பொழுது அணையின் நீர்மட்டம் 137.05 அடியை எட்டியதால் கேரளாவிற்கு உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. அணையில் உள்ள 13 மதகுகளில் தற்போது நான்கு மதகுகள் வழியாக கேரளாவிற்கு 534 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பொள்ளாச்சி அருகே மழை வெள்ளத்தில் மூழ்கிய தரைப்பாலம்!