தேனி: கோவை சரக டிஐஜி விஜயகுமார் இன்று காலை 6.45மணிக்கு நடைப்பயிற்சி சென்று வந்த பின், தனது முகாம் அலுவலகத்தில் வைத்து துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டார். இந்தச் சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விஜயகுமார் தற்கொலை செய்து கொண்டதை அறிந்த அவரது குடும்பத்தினர் மிகுந்த துயரத்தில் ஆழ்ந்துள்ளனர்.
தேனி மாவட்டம், போடி அணைக்கரைப்பட்டியை பூர்வீகமாகக் கொண்ட விஜயகுமார் ஐபிஎஸ், தனது பள்ளிப் பருவத்தை தேனியில் உள்ள நாடார் சரஸ்வதி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயின்றார். இவரது தந்தை செல்லையா ஓய்வுபெற்ற விஏஓ மற்றும் அவரது தாய் ராசாத்தி ஓய்வுபெற்ற பள்ளி ஆசிரியை ஆவார். இவரது மனைவி கீதாவாணி, இவருக்கு ஒரு மகளும் இருக்கிறாள்.
இதையும் படிங்க: காவல்துறையினரின் பணிச்சுமையைக் குறைக்க தமிழக அரசு என்ன செய்தது - டிஐஜி தற்கொலை குறித்து அண்ணாமலை!
கடந்த 2009ஆம் ஆண்டு ஐபிஎஸ் தேர்வு தேர்ச்சிப் பெற்று காவல்துறையில் விஜயகுமார் தனது பணியினைத் தொடங்கினார். இவர் காஞ்சிபுரம், கடலூர், நாகப்பட்டினம், மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி உள்ளார். குறிப்பாக இவர் சிபிசிஐடி எஸ்.பி.யாக இருந்தபோது தமிழ்நாட்டையே உலுக்கிய சாத்தான்குளம் ஜெயராஜ் மற்றும் பெனிக்ஸ் கொலை வழக்கினை விசாரிக்கும் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டார். மேலும், கடந்த ஜனவரி மாதம் டிஐஜியாகப் பதவி உயர்வுபெற்றார். அதன் பின் கோவை சரக டிஐஜியாகப் பணிபுரிந்து வந்தார்.
இந்நிலையில், கடந்த சில தினங்களாக மன உளைச்சலில் இருந்து வந்ததாகவும், உயர் அதிகாரிகள் மூலம் கவுன்சிலிங் அளித்ததாகவும் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் உள்ள அவரது குடும்பத்தினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்கள் மூன்று நாட்கள் அவருடன் இருந்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது. அதன் பின் இன்று காலை விஜயகுமார் அவரது முகாம் அலுவலகத்தில் வைத்து துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கோவையில் தற்கொலை செய்து கொண்ட கோவை டிஐஜி விஜயகுமாரின் உடல், அவர் சொந்த ஊரான தேனி ரத்தினம் நகரில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட உள்ளது. இதற்காக வீட்டில் முன்பு ஏராளமான உறவினர்கள், பொதுமக்கள் ஆகியோர் வருகை தந்து, விஜயகுமாரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.
டிஐஜி விஜயகுமார் தற்கொலை செய்து கொண்டதை அடுத்து தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: Vijayakumar IPS:விஜயகுமாரின் உடல் சொந்த ஊரான தேனிக்கு கொண்டு செல்ல ஆயத்தம்!