கடந்த 2019ஆம் ஆண்டு மருத்துவப் படிப்பிற்கான நீட் தேர்வில் ஆள்மாறட்டம் செய்து தேர்வு எழுதியிருப்பதாக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதலாமாண்டு படித்துவந்த மாணவர் உதித்சூர்யா என்பவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது.
இதையடுத்து நடைபெற்ற விசாரணையில் முறைகேடு உறுதிசெய்யப்பட்டு மாணவர் உதித்சூர்யா அவரது தந்தை வெங்கடேசன் ஆகியோர் காவல் துறையினரால் கைதுசெய்யப்பட்டனர்.
பின்னர் இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு தொடர் விசாரணை நடைபெற்றதில் அடுத்தடுத்து சென்னை, தர்மபுரி உள்ளிட்ட அரசு, தனியார் மருத்துவக்கல்லூரி மாணவர்கள் அவரது பெற்றோர் என இதுவரை 14 பேர் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு பின்னர் பிணையில் வெளிவந்தனர்.
இவ்வழக்கில் முக்கியக் குற்றவாளியான கேரளாவைச் சேர்ந்த இடைத்தரகர் ரசீது என்பவரை சிபிசிஐடி காவல் துறை தேடிவந்தது. கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தைப் பூர்விகமாக கொண்ட இவர், தற்போது கர்நாடக மாநிலம் பெங்களூரு ஜே.பி. நகர் பகுதியில் வசித்துவருகிறார்.
ஓராண்டுக்கு மேலாக இடைத்தரகர் ரசீது தேடப்பட்டுவந்த நிலையில் இன்று தேனி நீதித் துறை நடுவர் மன்ற நீதிபதி பன்னீர்செல்வம் முன்னிலையில் சரணடைந்தார்.
அவரை 15 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதனையடுத்து, இடைத்தரகர் ரசீதை சிறையில் அடைப்பதற்காக காவல் துறையினர் அழைத்துச் சென்றனர்.
இதையும் படிங்க: 'அவனியாபுரம் ஜல்லிக்கட்டு விழாக் குழுவில் மனுதாரர்'- நீதிமன்றம் உத்தரவு