தேனி: ஏலம் மணக்கும் நகரம் என்று அழைக்கப்படக்கூடிய போடிநாயக்கனூரில் மீண்டும் ஏலக்காய் கொள்முதல் விலை அதிகரித்து வருகிறது. தேனி மாவட்ட போடிநாயக்கனூர் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் ஏலக்காய் அதிகளவில் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. உலக நாடுகளின் ஏலக்காய் வர்த்தக ஏற்றுமதியில் போடிநாயக்கனூர் முக்கிய பங்கு வகிக்கிறது.
தமிழ்நாடு மற்றும் கேரளா பகுதிகளில் விளையும் இந்த ஏலக்காயின் கொள்முதல் விலையை மத்திய அரசு ஸ்பைசஸ் போர்டு என்ற இணைய வழி மூலமாகவும் தனியார் நிறுவனங்கள் மூலமாகவும் நிர்ணயம் செய்யப்படுகிறது.
தற்போது, பெய்து வரும் மழை காரணமாக ஏலக்காய் உற்பத்தி அதிகரித்துள்ள நிலையில் கடந்த வாரம் வரை தரம் பிரிக்கப்படாத ஏலக்காய் 1 கிலோ ரூபாய் 1450 முதல் 1550 வரை கொள்முதல் செய்யப்பட்டது. தரம் பிரிக்கப்பட்ட முதல் ரக ஏலக்காய் கிலோ ரூபாய் 1900 வரை விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில், கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் காரணமாக வெளிநாடுகளில் ஏலக்காய் தேவை அதிகரித்து வருவதால், தற்போது ஏற்றுமதியும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதனால் தற்போது, ஏலக்காய் விலை ரூபாய் 300 வரை அதிகரித்து தரம் பிரிக்கப்படாத ஏலக்காய் 1 கிலோ ரூபாய் 1850 வரை கொள்முதல் செய்யப்படுகிறது.
கடந்த வாரம் வரை கிலோ ஒன்றுக்கு ரூபாய் 1900 வரை விற்கப்பட்ட தரம் பிரிக்கப்பட்ட முதல் ரக ஏலக்காய் தற்போது ரூபாய் 2200 வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதனால், விவசாயிகளும் வியாபாரிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மேலும் தற்போது, அயல்நாடுகளுக்கு ஏற்றுமதி அதிகரிக்கத் தொடங்கியுள்ளதால் விலை உயரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது என விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: குற்றால அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு - சுற்றுலாப்பயணிகள் குளிக்க தடை!