தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள வடுகபட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட 9 முதல் 12 வார்டுகள் உள்ள பகுதி மற்றும் மேல்மங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளுக்கும் மின் விநியோகம் செய்யப்படும் மின் மாற்றி பழுதடைந்துள்ளது.
இதனால் நேற்று முன் தினம் (நவ. 1) காலை முதல் அந்தப் பகுதிகளுக்கு மின் விநியோகம் முற்றிலும் நிறுத்தப்பட்டது. பழுதான மின் மாற்றியை மின்வாரிய ஊழியர்கள் சீரமைத்தும் மீண்டும் பழுதடைந்தால் மின் விநியோகம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. இதன் காரணமாக மின் விநியோகம் மறுபடியும் நிறுத்தப்பட்டது.
இதைத்தொடர்ந்து நேற்று (நவ. 2) மாலைக்குள் மின் மாற்றியை சீரமைத்து விநியோகம் செய்யப்படும் என கூறப்பட்ட நிலையில், சீரமைக்கப்படாத நிலையில் அப்பகுதியினர் இரண்டாவது நாளாக இருளில் மூழ்கினர். இதனால் விரக்தியடைந்த வடுகபட்டி மற்றும் மேல்மங்கலம் கிராம மக்கள் திடீர் சாலை மறியிலில் ஈடுபட்டனர்.
பெரியகுளம் - ஆண்டிபட்டி சாலையில் குவிந்த அப்பகுதி கிராம மக்கள் மின்வாரிய அலுவலர்களை கண்டித்தும், பழுதான மின்மாற்றியை சீரமைத்து சீரான மின்விநியோகம் செய்திடக் கோரியும் மறியலில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த பெரியகுளம் தென்கரை காவல் துறையினர், சாலை மறியிலில் ஈடுபட்ட கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் மின் வாரிய அலுவலர்களிடம் பேசி, விரைவில் மின் விநியோகம் செய்வதற்கு உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதை தொடர்ந்து சாலை மறியிலை கைவிட்டு கிராம மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
பொதுமக்களின் சாலை மறியலால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்படைந்தது.
இதையும் படிங்க: கைதி உயிரிழப்பு குறித்து உடற்கூராய்வில் அதிர்ச்சிகர தகவல்!