தேனி: இந்த மாதம் சுபமுகூர்த்த தினங்கள் அதிகம் உள்ளதாலும், கார்த்திகை மாதத்தில் ஐயப்ப பக்தர்கள் அதிக அளவில் மாலை அணிவித்துள்ளதாலும், வாழை இலை கட்டின் விலை ரூபாய் 1,200 வரை ஏற்றம் கண்டுள்ளது. இதனால் வாழை விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தேனி மாவட்டம், பெரியகுளம் மற்றும் அதனைச் சுற்றி உள்ள வடுகபட்டி, மேல்மங்கள், ஜெயமங்களம், குள்ளப்புரம் உள்ளிட்ட பகுதிகளில் 2,500க்கும் மேற்பட்ட ஏக்கரில் விவசாயிகள் வாழை விவசாயத்தில் ஈடுபட்டுள்ளனர். வாழை விளைச்சல் அடைந்து வாழைத் தார்களை அறுவடை செய்த பின்பு, அடிக்கட்டையில் வளர்ந்து வரும் வாழை மரங்களில் 2 ஆண்டுகள் முதல் 3 ஆண்டுகளுக்கு வாழை இலைகள் அறுவடை செய்வது வாழை விவசாயிகளின் வழக்கம்.
இதையும் படிங்க: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது!
இந்நிலையில், கடந்த 6 மாதங்களாக வாழை இலை கட்டு 300 ரூபாய் முதல் 400 ரூபாய் வரை மட்டுமே விலை போனதால், விவசாயிகள் பெரும் வருவாய் இழப்பைச் சந்தித்து வந்தனர். இந்நிலையில், தற்போது திருமண வைபங்களின் சுபமுகூர்த்த தினங்கள், மற்றும் சபரிமலை கோயில் செல்லும் ஐயப்ப பக்தர்கள், முருக பக்தர்கள் அதிக அளவில் மாலை அணிந்துள்ளனர். இவர்கள் இந்த காலகட்டத்தில் விரதம் இருந்து, வீடுகளில் வாழை இலையில் சாப்பிடுவது வழக்கம்.
இதனால் தற்பொழுது வாழை இலை, ஒரு கட்டின் விலை 1,200 ரூபாய் வரை ஏற்றம் கண்டுள்ளதால், வாழை விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும், கடந்த ஆண்டு வாழை இலை ஒரு கட்டு 2,500 ரூபாய் வரை விலை போன நிலையில், இந்த ஆண்டு கடந்த ஆண்டின் விலையில் பாதி அளவு போவதாகவும், இருந்தபோதிலும் 1,200 ரூபாய் விலை போனாலே தங்களுக்கு போதுமான அளவு வருவாய் கிடைக்கும் எனவும் விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். மேலும், இந்த விலை மேலும் தொடர்ந்து மூன்று மாதங்களுக்கு நீடிக்கும் என நம்பிக்கையில் உள்ளதாக கூறினர்.