சிறையில் இருந்து விடுதலையான சசிகலாவை வரவேற்று பல்வேறு பகுதிகளிலும் அதிமுகவினர் சுவரொட்டிகள் ஒட்டி வருகின்றனர். அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வத்தின் சொந்த ஊரான தேனி மாவட்டத்திலும், சசிகலாவிற்கு ஆதரவான சுவரொட்டிகளை அதிமுகவினர் ஒட்டினர்.
சசிகலாவை வரவேற்று ஆண்டிபட்டியில் கடந்த 4 நாட்களுக்கு முன் போஸ்டர் ஒட்டிய அதிமுக நிர்வாகிகள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். ஆனாலும், பெரியகுளம் மேற்கு ஒன்றிய அம்மா பேரவை அவைத்தலைவர் வைகை சாந்தகுமார், ஆண்டிபட்டி மேற்கு ஒன்றிய தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் செல்லப்பாண்டி ஆகியோர், மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் சசிகலா ஆதரவு போஸ்டர்களை ஒட்டியிருக்கின்றனர்.
இந்நிலையில், சசிகலாவை வரவேற்று ஒட்டப்பட்ட போஸ்டர்கள் மீது, அதிமுக ஒன்றிய இளைஞர் பாசறை தலைவர் பாரத் தலைமையில், தேனி மக்களவை உறுப்பினரும், ஓ.பன்னீர்செல்வத்தின் மகனுமான ஓ.பி.ரவீந்திரநாத்தின் பிறந்த நாள் போஸ்டர்களை ஒட்டினர். இதனை அறிந்த அமமுகவினர், அதிமுகவினருடன் நள்ளிரவில் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். வாக்குவாதம் முற்றியதால் அங்கு காவல்துறையினர் குவிக்கப்பட்டு, இரு தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதில் இருதரப்பும் சமரசம் ஆகாததால் சசிகலா ஆதரவு சுவரொட்டிகள் மீது ரவீந்திரநாத்தின் பிறந்தநாள் போஸ்டர்களை பல இடங்களிலும் அதிமுகவினர் ஒட்டியுள்ளனர். ஆகவே இருதரப்புக்கும் எப்போது வேண்டுமானாலும் மோதல் வரும் சூழல் நிலவுவதால் அங்கு பாதுகாப்புக்காக ஏராளமான காவலர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். போஸ்டர் அரசியலால் ஆண்டிபட்டி பகுதி பரபரப்பாகவே காணப்படுகிறது.
இதையும் படிங்க: சசிகலா வருகை: கையெடுத்து கும்பிட்ட அமைச்சர்