ஆண்டிபட்டி அருகேயுள்ள மொட்டனூத்து கிராமத்தைச் சேர்ந்தவர் சொக்கநாத அகோரி சாமியார். இவர், ஊர் மக்களின் நன்மைக்காக இன்று முதல் 9 நாட்கள், பூமிக்கடியில் அமர்ந்து வேள்வி பூஜை செய்யப்போவதாக கூறியிருந்தார். இதற்காக மொட்டனூத்து கிராமத்தின் வடக்குப் பகுதியில் உள்ள தனியார் நிலத்தில் 7அடி உயரம், 6அடி நீளம் மற்றும் 5அடி அகலத்தில் தோண்டப்பட்ட குழியில், இன்று காலை போய் அமர்ந்து கொண்டார். இதனை காண சுற்றுவட்டார மக்கள் மொட்டனூத்து கிராமத்தில் குவிந்தனர்.
இதனிடையே சாமியார் ஜீவசமாதி அடையப்போவதாக தகவல் வெளியானதால், நிகழ்விடத்திற்கு வந்த இராஜதானி காவல்துறையினர் குழியிலிருந்து வெளியே வருமாறு சாமியாரிடம் கூறினர். ஆரம்பத்தில் முரண்டு பிடித்த சாமியார், நீண்ட பேச்சுவார்த்தைக்குப்பின் வெளியே வந்தார். பின்னர் இது போன்ற பூஜைகள் செய்ய அனுமதி இல்லை எனக்கூறி அங்கிருந்த பந்தல், பூஜை பொருட்களை அப்புறப்படுத்தவும் காவல்துறையினர் உத்தரவிட்டனர். இதனால் சாமியார் குழிக்குள் இறங்கும் பூஜை பாதியிலேயே நின்று போனது.
கடந்த 24 ஆண்டுகளாக தவம் புரிந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வந்ததாக கூறிய சொக்கநாத அகோரி, கரோனா நோய் பிடியில் இருந்து மக்களை காப்பதற்காகவே, 9 நாட்கள் பூமிக்கடியில் அமர்ந்து பூஜை செய்ய குழிக்குள் இறங்கியதாகவும், ஆனால் காவல்துறையினர் தடுத்து விட்டதாகவும் விரக்தியுடன் பேசினார்.
பின்னர் பேசிய சொக்கநாத அகோரியின் பக்தரும், பாரதிய இந்து பரிவார் ஆலய வழிபாட்டு இயக்க நிர்வாகியுமான குமாரலிங்கம், ” சாமி 9 நாட்கள் வேள்வி பூஜை செய்து அதன் பின்னர் தஞ்சையில் ஜோதிமயமாக மாறி பக்தர்களுக்கு அருள் பாலிப்பதாக இருந்தார். ஆனால், காவல்துறையினரின் உத்தரவால் பூஜை தடை பட்டுவிட்டது ” எனத் தெரிவித்தார்.
சொக்கநாத அகோரி ஜீவசமாதி அடையப்போவதாக வெளியான தகவலால், மிகவும் ஆவலுடன் அங்கு வேடிக்கை பார்ப்பதற்காக கூடியிருந்த மக்கள், குழி பூஜை தடைப்பட்டதால் பெரும் ஏமாற்றத்துடன் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இதையும் படிங்க: செய்தியாளர் சந்திப்பில் முருகன் ஜிக்கும் பி.வி. கதிரவனுக்கும் இடையே மோதல்!