தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகேவுள்ள பாலக்கோம்பை கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி வெள்ளைத்துரை (40). இவரது மனைவி வள்ளி (35). இவர், தேனியிலுள்ள தனியார் நூற்பாலையில் வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு, ரமேஷ் (15), தினேஷ் (12) ஆகிய இரண்டு மகன்கள் உள்ளனர்.
இந்நிலையில், வெள்ளைத்துரை தனது மனைவி வள்ளியை நேற்றிரவு (பிப்.23) வேலைக்கு அனுப்புவதற்காக இருசக்கர வாகனத்தில் சென்று பேருந்து நிறுத்தத்தில் இறக்கிவிட்டு வீட்டிற்கு திரும்பினார். இதனையடுத்து இரவு பணி முடிந்து இன்று (பிப்.24) காலை வீட்டிற்குத் திரும்பிய வள்ளி, தனது கணவர் வீட்டில் இல்லாததைக் கண்டு அக்கம் பக்கத்தில் விசாரித்தார்.
மேலும், பல இடங்களில் அவரை தேடியும் கண்டுபிடிக்க இயலவில்லை. இதையடுத்து, இராஜதானி காவல் நிலையத்தில் தனது கணவரை காணவில்லை என புகார் அளித்தார். அப்புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், அவரை தீவிரமாக தேடினர். இந்நிலையில், பாலக்கோம்பை - ராயவேலூர் கிராமத்திற்கு இடையிலுள்ள சாலிகுல ஓடையில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் உயிரிழந்து கிடப்பதாக காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்துள்ளது.
பின்னர், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல் துறையினர், உயிரிழந்து கிடந்தது காணாமல்போன வெள்ளைத்துரை என்பதை கண்டறிந்தனர். இதையடுத்து, அவரது உடலை மீட்ட காவல் துறையினர், உடற்கூராய்வுக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு, கைரேகை நிபுணர் குழுவினர் உதவியுடன் தடயங்களைை சேகரித்தனர். மேலும், சம்பவம் நடந்த இடத்தை தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய்சரண் தேஜஸ்வி நேரில் ஆய்வு செய்தார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த இராஜதானி காவல் துறையினர், விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
இதையும் படிங்க: எங்களை கருணை கொலை செய்யுங்கள் - கதறும் பார்வை திறன் குன்றிய மாற்றுத்திறனாளிகள்!