பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வன வேங்கைகள் கட்சியின் சார்பில், தேனியில் கடந்த ஜனவரி 16ஆம் தேதி பன்றி தழுவும் போட்டி நடைபெற்றது. தேனி குறமகள், வள்ளிநகர் பகுதியில் நடைபெற்ற இப்போட்டியில், ஜல்லிக்கட்டு போன்று தொழுவாசல் (வாடிவாசல்) அமைத்து பன்றிகள் அவிழ்த்து விடப்பட்டன.
எல்லைக் கோட்டை பன்றிகள் தாண்டியதும், சுமார் 80 முதல் 100 கிலோ எடையுடைய பன்றிகளின் பின்னங்கால்களை பிடித்து வீரர்கள் தழுவிச் சென்றனர். ஜல்லிக்கட்டு போன்று விநோதமாக நடைபெற்ற இப்போட்டி பொதுமக்களிடம் ஆச்சரியத்தையும், பெரும் வியப்பையும் ஏற்படுத்தின.
இந்நிலையில், அனுமதியின்றி போட்டி நடத்தியதாக ஏழுந்த புகாரையடுத்து, அல்லிநகரம் காவல் துறையினர், வனவேங்கை கட்சியின் மாநில பொதுச்செயலாளர் உலகநாதன், தேவதானப்பட்டி பரமசிவம், சக்தீஸ்வரன் மற்றும் அல்லிநகரம் செல்வி மற்றும் பலர் மீது மிருகவதை தடுப்பு சட்டம் உள்பட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மனித உயிருக்கு தீங்கு விளைவிக்கும் எனத் தெரிந்திருந்தும் பன்றிகளை வைத்து போட்டி நடத்தி அதன் வால், பின்னங்கால்களை பிடித்து துன்புறுத்தியுள்ளதாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.