தேனி அருகேயுள்ள பழனிசெட்டிபட்டி சுப்ரமணிய சிவா தெருவில் வாடகை வீட்டில் சகுந்தலா (65) - முருகராஜன் தம்பதியினர் வசித்துவந்தனர். இவர்களுக்கு பாலமுருகன் (45) என்ற மகனும், காஞ்சனா (42), கோமளா (40) என்ற இரு மகளும் உள்ளனர். இதில் பாலமுருகன் என்பவர் திருமணம் முடித்துவிட்டு குடும்பத்தினருடன் 20 ஆண்டுகளாக எந்தப் பேச்சுவார்த்தையும் இல்லாமல் இருந்ததாகக் கூறப்படுகிறது.
காஞ்சனா என்பவர் திருமணம் முடித்து பழனிசெட்டிபட்டியில் வசித்துவருகிறார். மாற்றுத்திறனாளியான கோமளா, திருமணம் ஏதும் முடிக்காமல் தனது பெற்றோருடன் வசித்துவந்துள்ளார். கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு முருகராஜன் உடல்நலக்குறைவால் இறந்துவிட்டார். இதன்பின்பு சகுந்தலாவும் கோமளாவும் தோசை மாவு விற்பனை செய்து பிழைப்பு நடத்திவந்துள்ளனர்.
குடும்ப வறுமை காரணமாக அக்கம்பக்கத்தினரிடம் சுமார் 2 லட்சம் ரூபாய் வரை இவர்கள் கடன் வாங்கியதாகக் கூறப்படுகிறது. வாங்கிய கடனை கட்ட முடியாததாலும், உறவினர்கள் யாரும் தங்களுக்கு ஆதரவளிக்கவில்லை என்ற மனவிரக்தியிலும் இவ்விருவரும் வீட்டிலேயே விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டனர்.
இதனையறிந்த அக்கம்பக்கத்தினர் காவல் துறைக்குத் தகவல் அளித்தனர். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த காவலர்கள் இருவரின் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்விற்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
மேலும், இதுகுறித்து காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். கடன் தொல்லையால் தாயும் மகளும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: டிஎன்பிஎஸ்சி தேர்வை மீண்டும் நடத்த வேண்டும் - டிடிவி தினகரன்!