தென்மேற்கு பருவமழை ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் கேரளாவில் தீவிரமடைந்து வருகிறது. தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், இடுக்கி மாவட்டத்தின் ஒரு சில இடங்களில் வெள்ளப் பெருக்கு, நிலச்சரிவு உள்ளிட்ட பேரிடர்கள் ஏற்பட்டுள்ளன.
இந்நிலையில், தேக்கடியில் அமைந்துள்ள முல்லைப் பெரியாறு அணையில் நீர்வரத்தும் அதிகரித்து நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகின்றது. நேற்று (ஆகஸ்ட் 7) முழுவதும் பெய்த மழையால் தேக்கடியில் 40.4 மி.மீ மற்றும் முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் 83.2 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது.
இதன் காரணமாக அணையின் நீர்மட்டம் இன்று (ஆகஸ்ட் 8) ஒரே நாளில் 4அடி உயர்ந்து 133.80 அடியை எட்டியுள்ளது. அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 152 அடி, இதில் நீர் தேக்குவதற்கு அனுமதிக்கப்பட்ட அளவு 142 அடியாகும். இன்று காலை நிலவரப்படி அணையின் நீர் இருப்பு 5586 மி.கன அடியாக உள்ளது.
விநாடிக்கு 11,533 கனஅடி நீர்வரத்துள்ள நிலையில் தமிழ்நாட்டுக்கு 1,671 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. இதனிடையே, அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வரும் நிலையில் நேற்றிரவு 132.60அடியை எட்டியதும் கேரளாவின் பெரியாற்றங்கரையோர பகுதிகளுக்கு முதல்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளதாக இடுக்கி மாவட்ட ஆட்சியர் தினேஷன் அறிவித்துள்ளார்.
முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தமிழ்நாட்டிற்கு திறக்கப்படும் தண்ணீர் அதிகரிப்பு மற்றும் மூல வைகையில் ஏற்பட்ட நீர்வரத்தால் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணையின் நீர்மட்டமும் ஒரே நாளில் 3அடி வரை உயர்ந்து தற்போது 35அடியை எட்டியுள்ளது. இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 35.04அடியாக உள்ளது. அணையின் மொத்த உயரம் 71அடியாகும். அணையின் நீர் இருப்பு 608மி.கன அடியாக உள்ளது. விநாடிக்கு 1571கன அடி நீர் வரத்துள்ள நிலையில் மதுரை குடிநீருக்காக 72கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.