தேனி மாவட்டம் அகில இந்திய ஓபிசி ஒருங்கிணைப்புக் குழுவினர் இன்று (ஆக.17) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அரை நிர்வாணப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, "2021ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பில் ஓபிசி வகுப்பினரையும் சேர்க்க வேண்டும், மருத்துவ சேர்க்கைக்கான இட ஒதுக்கீட்டை இந்த ஆண்டே நடைமுறைப்படுத்த வேண்டும், அவற்றில் டி.என்.டி. மக்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவதை உறுதிப்படுத்த வேண்டும்" உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
முன்னதாக தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரை சாலையில் இருந்து ஊர்வலமாக வந்து மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவாயிலில் நின்று கண்டன கோசங்களை எழுப்பினர். அங்கு பணியில் இருந்த காவல் துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தினர்.
பின்னர் தங்களது கோரிக்கை மனுக்களை ஆட்சியர் அலுவலக புகார் பெட்டியில் போட்டு விட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்டவர் கூறுகையில், "35ஆண்டுகளாக கல்வி, வேலைவாய்ப்பில் டி.என்.டி சமூக மக்களின் உரிமைகள் மறுக்கப்படுகிறது. இதனால் கல்வி, வேலைவாய்ப்பில் நாங்கள் மிகவும் பின்தங்கியுள்ளோம்.
எனவே இந்த ஆண்டாவது இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும். இல்லையென்றால் வரும் தேர்தலை புறக்கணிப்போம்" எனத் தெரிவித்தனர்.