தேனி: கம்பத்தில் திமுக மாவட்ட செயலாளர் ராமகிருஷ்ணன் இல்லத் திருமண விழாவில் மதிமுக செயல் தலைவர் துரை வைகோ பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ”ஈரோடு இடைத்தேர்தலில் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளதால் ஈவிகேஎஸ் இளங்கோவன் மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்.
முல்லைப்பெரியாறு விவகாரத்தில் நீதிமன்றங்களின் தீர்ப்புக்கு எதிராக கேரள அரசு செயல்பட்டு வருகிறது. கேரள அரசு புதிய அணை கட்டும் முயற்சியில் ஈடுபட்டால் மீண்டும் களத்திற்கு வந்து பெரும் போராட்டத்தை நடத்துவேன். ஈரோடு இடைத்தேர்தலில் எவ்வளவு பணம் கொடுத்தாலும் மக்கள் ஒருவரை வெற்றி பெற வைக்க நினைத்துவிட்டால் அந்த முடிவை மாற்ற முடியாது. தேர்தலில் பணம் கொடுத்து விட்டால் மக்களின் மனதை மாற்றி வெற்றி பெற்று விடலாம் என்று நினைப்பது தவறான கருத்தாகும்.
தமிழ்நாட்டுக்கு கலைஞர் ஆற்றிய பங்களிப்பை யாரும் மறுக்க முடியாது. கடலில் பேனா சின்னம் வைப்பது குறித்து சிலர் ஆதரவாகவும் சிலர் சுற்றுச்சூழல் பாதிக்கும் எனவும் சிலர் கருத்து தெரிவித்து வந்துள்ளனர். யாருக்கும் பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் செயல்பட மாட்டோம் என்று தமிழ்நாடே அரசே கூறியுள்ளது. சிலர் வன்முறையினை தூண்டும் வகையில் உடைப்பேன் என்று கருத்து கூறுவது ஆரோக்கியமான அரசியல் கிடையாது'' என்று கருத்துக்கேட்பு கூட்டத்தில் சீமான் பேசியதற்கு கண்டனம் தெரிவித்தார்.
மேலும், ’’நியூட்ரினோ திட்டம் தென் தமிழ்நாடு மாவட்டங்களுக்கு ஒரு அபாயகரமான திட்டமாக தான் உள்ளது. மேலும் நியூட்ரினோ திட்டத்தை செயல்படுத்தி முல்லைப் பெரியாறு மற்றும் இடுக்கி அணைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டால் தமிழகம் மட்டுமல்லாது கேரளாவிற்கு ஒரு பேரழிவாக அமையும்” என்று துரை வைகோ கூறினார்.
இதையும் படிங்க: 'முல்லைப் பெரியாறு பிரச்னைக்காக மீண்டும் போராட்டம் நடத்துவோம்' - வைகோ!