தேனி மாவட்டம், பெரியகுளம் ஒன்றியத்திற்குட்பட்டது, கீழவடகரை ஊராட்சி. இந்த ஊராட்சியின் தலைவராக உள்ள பட்டியலினத்தைச் சேர்ந்த செல்வராணி செல்வராஜ் என்பவரை மாவட்ட ஊராட்சிக்குழு துணைத் தலைவர் ராஜபாண்டியன் ஊராட்சிப்பணிகளை செய்யவிடாமல் தடுப்பதாகப் புகார் தெரிவித்திருந்தார்.
இதே போன்று அழகர்நாயக்கன்பட்டி ஊராட்சி மன்றத்தலைவி கோட்டையம்மாள் என்பவரும் மாவட்ட ஊராட்சிக் குழுத் துணைத் தலைவர் மீது புகார் கூறியிருந்தார். இது தொடர்பாக நேற்று (அக். 11) நடைபெற்ற மாவட்ட கிராம ஊராட்சி மன்றத் தலைவர்கள் கூட்டமைப்பின் அவசரக் கூட்டத்தில் ராஜபாண்டியனை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் மாவட்ட ஆட்சியரிடமும் இது தொடர்பாகப் புகார் மனு அளிப்பதாகவும் முடிவெடுக்கப்பட்டது.
இந்நிலையில் தன் மீது ஊராட்சி மன்றத் தலைவர்கள் தெரிவித்திருக்கும் புகார்களுக்கு சம்பந்தப்பட்ட மாவட்ட ஊராட்சிக்குழு துணைத் தலைவர் ராஜபாண்டியன் விளக்கம் அளித்துள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ராஜபாண்டியன், 'மாவட்ட ஊராட்சிக்குழு துணைத் தலைவர் என்ற முறையிலும், மத்தியில் ஆளும் தேசிய கட்சியின் உள்ளாட்சித் துறையின் மாநிலப் பொறுப்பாளர் என்ற முறையிலும் மாவட்டத்தில் நடைபெற்று வரும் திட்டப்பணிகளை அரசு அலுவலர்களுடன் இணைந்து ஆய்வு செய்து வருகின்றேன்.
இவற்றில் நூறு நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தில் முறைகேடுகள் நடைபெறுவது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் மத்திய அரசின் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ், புதிய குடிநீர் குழாய் இணைப்பிற்கு நிர்ணயிக்கப்பட்ட அரசுக்கட்டணத்தைவிட கூடுதலாக வசூல் செய்வதும் தெரியவந்தது.
இதனைக் கண்டறிந்து சம்பந்தப்பட்ட ஊராட்சி மன்றங்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சி முகமை அலுவலர்களுக்குப் புகார் அளித்துள்ளேன். இந்த விவகாரத்தில் சரியாக பணியாற்றாத பெரியகுளம் வட்டார வளர்ச்சி அலுவலர் மீதும் புகார் தெரிவித்துள்ளேன். தனிப்பட்ட முறையில் நான் யார் மீதும் புகார் அளிக்கவில்லை. இதனால் ஏற்பட்ட அரசியல் காழ்ப்புணர்ச்சியால் தன் மீது சாதி ரீதியாக பாகுபாடு காட்டப்படுவதாக பொய் புகார் தெரிவித்துள்ளனர். இது போன்ற குற்றச்சாட்டுகள் தெரிவிப்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்' எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க...குழந்தையின் உயிரைக் காப்பாற்ற 30கி.மீ., தூரத்தை, 27 நிமிடங்களில் அடைந்த ஓட்டுநர்!