தேனி மாவட்டத்தில் நகர்ப்புறப் பகுதிகளில், நீர்நிலை புறம்போக்கு நிலம், சாலைகள் மற்றும் ரயில்வே புறம்போக்கு நிலம் ஆகியவற்றில் ஆக்கிரமிப்பு செய்து குடியிருந்து வரும் இரண்டாயிரத்து 925 நபர்கள் மாவட்ட நிர்வாகத்தால் கண்டறியப்பட்டு, தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் சார்பில் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் மறு குடியமர்வு செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்நிலையில், தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் சார்பில் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து துறை சார்ந்த முதன்மை அலுவலர்களுடன் தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் இன்று ஆலோசனை நடத்தினார். தேனி சுற்றுலா மாளிகையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ், கம்பம் சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.டி.கே. ஜக்கையன், தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய மேற்பார்வை பொறியாளர் சண்முகசுந்தரம், உதவிப் பொறியாளர் மணிபாலன் உள்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
இக்கூட்டத்தில், 2019–20ஆம் நிதியாண்டில் தேனி மாவட்டம், வடவீரநாயக்கன்பட்டி பகுதியில் ரூ.31.17 கோடி மதிப்பீட்டில் 13 அடுக்கு மாடிகள் கொண்ட 312 குடியிருப்புகள் தொடர்பாக நடைபெற்றுவரும் பணிகளில் முதற்கட்டமாக 6 அடுக்குமாடிகளில் 144 குடியிருப்புகள் கட்டுமானப் பணிகளும், தப்புக்குண்டு பகுதியில் ரூ.43.02 கோடி மதிப்பீட்டில் 18 அடுக்கு மாடிகள் கொண்ட 432 குடியிருப்புகள் தொடர்பாக நடைபெற்றுவரும் பணிகளில் முதற்கட்டமாக 3 அடுக்குமாடிகளில் 72 குடியிருப்புகள் கட்டுமானப் பணிகளும், கோம்பை சிக்காட்சி அம்மன் கோயில் அருகில் ரூ.47.99 கோடி மதிப்பீட்டில் 15 அடுக்கு மாடிகள் கொண்ட 480 குடியிருப்புகள் தொடர்பாக நடைபெற்றுவரும் பணிகளில் முதற்கட்டமாக 5 அடுக்குமாடிகளில் 160 குடியிருப்புகள் கட்டுமானப் பணிகளும் நிறைவுற்று, தற்சமயம் தயார் நிலையில் உள்ளதாக அலுவலர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மேற்கண்ட மூன்று பகுதிகளில் முழுமையாக நிறைவுபெற்ற குடியிருப்புகளை வருகின்ற ஆகஸ்ட் மாதத்திற்குள் மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைப்பு செய்திடவும், மீதமுள்ள குடியிருப்பு கட்டுமானப் பணிகளை விரைந்து முடித்து, வருகின்ற செப்டம்பர் மாதம் இறுதிக்குள் மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைப்பு செய்திடவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு துறை சார்ந்த அலுவலர்களுக்கு துணை முதலமைச்சர் உத்தரவிட்டார்.