தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகங்களில் பணிபுரிந்து கடந்த ஏப்ரல் 2019முதல் டிசம்பர் 2019வரை பணி ஓய்வு பெற்றவர்களுக்கு ஓய்வூதியப் பலன்களான வருங்கால வைப்பு நிதி, பணிக்கொடை நிதி, ஓய்வூதிய முன்கூட்டுத் தொகை மற்றும் ஈட்டிய விடுப்புச் சம்பளம் ஆகியவற்றிற்காக, ரூ.972.43 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
இதில் மதுரை கோட்டத்திற்கு உட்பட்ட மதுரை, திண்டுக்கல், விருதுநகர் ஆகிய 3 மண்டலங்களில் மட்டும் பணி ஓய்வு பெற்ற தேனி மாவட்டத்தைச் சேர்ந்த 80 பணியாளர்களுக்கு ரூ.21.44 கோடி மதிப்பில் ஓய்வூதியப் பலன்கள் வழங்கப்பட்டன.
தேனி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்ற இவ்விழாவில், தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கலந்து கொண்டு ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு காசோலைகளை வழங்கினார்.
முன்னதாக, அவர் போடி சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட அணைக்கரைப்பட்டி, ராசிங்காபுரம், சங்கராபுரம் ஆகிய பகுதிகளில் அம்மா மினி கிளினிக்களை திறந்து வைத்தார். மேலும் கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை வழங்கினார்.