தேனி: தமிழ்நாடு அரசியல் களம் பரபரப்பாக இருக்கும் தற்போது சூழலில் சில நாட்களுக்கு முன்பு முதலமைச்சர் ஸ்டாலின் அனைத்து சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கும் ஒரு கடிதம் எழுதினார். அதில், ”ஒவ்வொரு சட்டப்பேரவை உறுப்பினர்களும் தங்களின் தொகுதிக்குட்பட்ட தீர்க்காமல் உள்ள 10 முக்கிய பிரச்சினைகள் குறித்து தகவல் அளிக்க வேண்டும். அந்த பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்கபடும்” என தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் இன்று போடிநாயக்கனூர் சட்டப்பேரவை உறுப்பினரான ஓ.பன்னீர்செல்வம் தேனி மாவட்ட ஆட்சியர் முரளிதரனை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேரில் சென்று சந்தித்தார். சுமார் 1 மணி நேரம் அவரை சந்தித்து விட்டு பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது அவர் கூறுகையில் “எனது தொகுதியான போடிநாயக்கனூர் பகுதியில் உள்ள 10 முக்கிய பிரச்சினைகள் குறித்து முதலமைச்சர் கூறியதன் அடிப்படையில் அதிமுக மாவட்ட செயலாளர் மூலமாக கடந்த சில நாள்களுக்கு முன்பு மாவட்ட ஆட்சியரிடம் வழங்கபட்டது.
அவ்வாறு வழங்கபட்ட மனுவின் மீது எத்தைய நடவடிக்கைகள் எடுக்கபட்டது என்பது குறித்து மாவட்ட ஆட்சியரை சந்தித்து கேட்டறிந்தேன். குறிப்பிடப்பட்ட பிரச்சினைகளை களைவதற்காக பூர்வாங்க பணிகள் அனைத்தும் நடைபெற்று வருவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்” என்றார்.
இதையும் படிங்க: பரந்தூர் விமான நிலையப் போராட்டம் தற்காலிகமாக நிறுத்திவைப்பு