மத்திய அரசு கொண்டுவந்திருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் தொடர் போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன. இதன் தொடர்ச்சியாகத் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் சி.ஏ.ஏ., என்.ஆர்.சி., என்.பி.ஆர்., உள்ளிட்டவற்றிற்கு எதிராகச் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றக்கோரி தொடர் போராட்டங்கள் நடந்துவருகின்றன. தமிழ்நாட்டில் இதன் தாக்கம் அதிகமாகக் காணப்படுகிறது.
கடந்த 30 நாள்களுக்கும் மேலாக தேனி மாவட்டத்தில் பெரியகுளம், போடி, கம்பம் உள்ளிட்ட பல பகுதிகளில் மக்கள் போராடிவருகின்றனர். சி.ஏ.ஏ. போராட்டங்களில் ஈடுபட்டுவரும் அமைப்பினர்களை அழைத்து, குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக அவர்களின் கருத்துகளைக் கேட்டு ஐயப்பாடுகளைக் களைவதற்காக இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் இந்தச் சட்டத்திற்கு எதிராக தமிழ்நாடு அரசு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை துணை முதலமைச்சரிடம் இஸ்லாமிய ஜமாஅத் தலைவர்கள் வலியுறுத்தினர் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்தக் கூட்டத்தில் தேனி மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ், கம்பம் சட்டப்பேரவை உறுப்பினர் ஜக்கையன், தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய்சரண் தேஜஸ்வி, தேனி மாவட்ட இஸ்லாமிய ஜமாஅத் தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு இஸ்லாமிய இயக்க பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
இந்தக் கூட்டத்தில் பங்கேற்க வந்த இஸ்லாமியர்கள் செல்போன் எடுத்துச்செல்ல அனுமதி மறுக்கப்பட்டு காவல் துறையினர் வசம் ஒப்படைத்துச் சென்றனர்.
சென்னை தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலர் சண்முகம் தலைமையில் இஸ்லாமிய பிரதிநிதிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது கவனிக்கத்தக்கதாகும்.
இதையும் படிங்க : சிஏஏ தொடர்பாக தலைமை செயலர், இஸ்லாமிய பிரதிநிதிகளுடன் ஆலோசனை!