மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, அதனுடன் இணைக்கப்பட்ட தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களின் கடன் உதவி வழங்கும் விழா தேனியில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, தேனி மக்களவைத் தொகுதி உறுப்பினர் ஓ.பி. ரவீந்திரநாத்குமார், மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ், கூட்டுறவுத் துறை அலுவலர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் பேசிய துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், கூட்டுறவுத் துறை மூலம் கடன் பெறுபவர்கள் நல்ல முறையில் தொழிலை நடத்தி வாழ்வில் முன்னேற வேண்டும் எனக் கூறினார். பின்னர் தேனி மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் ஆயிரத்து 597 நபர்கள் பயன்பெறும் வகையில் 20 கோடியே 52 லட்சத்து 76 ஆயிரத்து 635 ரூபாய் மதிப்புள்ள கடன் உதவிகளை வழங்கினார்.
அதைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சத்தித்த துனை முதலமைச்சர், விக்ரவாண்டி, நாங்குநேரி சட்டப்பேரவை இடைத்தேர்தலில் அதிமுகவிற்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. அதிக வாக்குகள் வித்யாசத்தில் வெற்றி பெறுவோம் என நம்பிக்கை தெரிவித்தார்.
பின்னர் நீட் ஆள்மாறாட்டம் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், நீட் தேர்வில் தவறு செய்தவர்கள் கண்டிப்பாக தண்டிக்கப்படுவார்கள். இந்த வழக்கை சிபிசிஐடி காவல் துறையினர் சரியான முறையில் விசாரணை செய்துவருகின்றனர் எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: குறைவான விலையில் வீடுகள் கட்டித்தரப்படும் - ஓபிஎஸ்