தமிழ்நாட்டில், வடகிழக்குப் பருவமழை கடந்த சில நாள்களுக்கு முன் தீவிரமடைந்ததை ஒட்டி அனைத்து இடங்களிலும் கனமழை பெய்தது. இதைத் தொடர்ந்து, மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள தேனி மாவட்டத்திலும் தொடர் மழை பெய்து வந்தது. இதன் காரணமாக, மாவட்டத்தில் உள்ள முக்கிய நீர் நிலைகளில் நீர் வரத்து ஏற்பட்டு அணைகள் வேகமாக நிரம்பத் தொடங்கின.
அதன் தொடர்ச்சியாக, தேவதானப்பட்டி அருகேயுள்ள மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயரத் தொடங்கி, அதன் முழு கொள்ளளவான 57 அடியை எட்ட தொடங்கியது. ஆனால், பாதுகாப்பு கருதி 55 அடியில் தண்ணீர் நிறுத்தப்பட்டு உபரிநீர் முழுவதும் மதகுகள் வழியாக வெளியேற்றப்பட்டு வந்தன.
இந்நிலையில், அணையிலிருந்து முதல் போக பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்ததை தொடர்ந்து இன்று முதல் மஞ்சளாறு அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 5 ஆயிரத்து 259 ஏக்கர் நிலங்கள் பாசனவசதி அடையும் வகையில், மஞ்சளாறு அணையிலிருந்து வினாடிக்கு 100 கன அடி தண்ணீரை மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் இன்று திறந்து வைத்தார்.
முன்னதாக அணையின் பழைய, புதிய ஆயக்கட்டு பகுதிகளுக்குச் செல்லக்கூடிய மதகுகளுக்கு பூஜை செய்யப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது. பின்னர் மதகுப்பகுதியில் வெளியேறிய தண்ணீரை மாவட்ட ஆட்சியர் மலர் தூவி வரவேற்றார்.
இந்த தண்ணீர் திறப்பின் மூலம் தேனி மாவட்டத்தில் தேவதானப்பட்டி, கெங்குவார்பட்டி, ஜி.கல்லுப்பட்டி மற்றும் திண்டுக்கல் மாவட்டத்தில் கணவாய்ப்பட்டி, வத்தலக்குண்டு, சிவஞானபுரம், கண்ணுவராயன்பட்டி ஆகியப் பகுதிகளில் உள்ள 3 ஆயிரத்து 386 ஏக்கர் பழைய ஆயக்கட்டு, ஆயிரத்து 873 புதிய ஆயக்கட்டு ஆக மொத்தம் ஆயிரத்து 5,259 ஏக்கர் நிலங்கள் முதல் போக சாகுபடி வசதி அடையும்.
அணையின் நீர் இருப்பை பொறுத்து இன்று முதல் 107நாள்களுக்கு திறக்கப்படும். தண்ணீரை விவசாயிகள் சிக்கனமாகப் பயன்படுத்தி குறுகிய காலப் பயிர்களை சாகுபடி செய்து பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார்.
இன்று காலை நிலவரப்படி, அணையின் நீர்மட்டம் 55 அடியாக உள்ளது. அணையின் நீர் இருப்பு 435.32 மி.கன அடியாகவும், நீர்வரத்து 46 கன அடியாகவும் உள்ளது. இந்நிகழ்வில், பொதுப்பணி, வருவாய்த் துறை உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்கள், விவசாயிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க:மஞ்சளாறு அணை நீர்மட்டம் உயர்வு - 3ஆம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை