தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரையிலுள்ள வாகம்புளித் தெருவில் வசித்துவருபவர்கள் ஹக்கீம் மற்றும் ஜாபர். இவர்கள் தாமரைக்குளம் பகுதியில் உள்ள காலேஜ் விலக்கில் கறிக்கடை வைத்து தொழில் நடத்தி வருகின்றனர். அதே பகுதியில் தாமரைக்குளம் சுப்பிரமணியசிவா தெருவில் குடியிருந்து வரும் சையது முகமது என்பவருடைய மாமனாரும் கறிக்கடை வைத்துள்ளார்.
இந்நிலையில், தொழில் போட்டி காரணமாக சையது முகமதுவின் மாமனாரை ஹக்கீம், ஜாபர் ஆகியோர் கடுமையாக தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதனைத் தட்டிக் கேட்பதற்காக ஜாபர் வீட்டிற்கு சையது முகம்மது சென்றுள்ளார். அங்கு அவர்களுக்கு இடையே ஏற்பட்ட வாயத்தகராறு முற்றி ஒரு கட்டத்தில், கைகலப்பாக மாறியுள்ளது. இதில் ஹக்கீம், ஜாபர் ஆகியோருடன் இருந்த இரண்டு நபர் உள்ளிட்ட நான்கு பேரும் சேர்ந்து சையது முகம்மதுவை கடுமையாக தாக்கியதில் பலத்த காயமடைந்துள்ளார்.
தாக்குதலுக்குள்ளானவரை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு பெரியகுளம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அனுமதிக்கப்பட்ட சிறிது நேரத்திலே பரிதாபமாக சையது முகமது உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதனிடையே சையது முகம்மதுவின் இறப்பிற்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவரது உறவினர்கள் பெரியகுளம் காவல் துணைக் கண்காணிப்பாளர் முத்துக்குமாரிடம் கோரிக்கை விடுத்தனர். குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதியளித்தார். இது குறித்து பெரியகுளம் தென்கரை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.