தேனி அருகே உள்ள அல்லிநகரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் சுமார் 800க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் வணிகவியல் பிரிவில் அல்லிநகரம் கம்பர் தெருவை சேர்ந்த முருகன் என்பவரின் மகன் திருமால் (17), அல்லிநகரம் அழகர்சாமி காலனியை சேர்ந்த மாரியப்பன் என்பவரது மகன் சக்திவேல்(17) ஆகியோர் படித்து வருகின்றனர். இன்று பிற்பகல் உணவு இடைவேளைக்காக இருவரும் அவரவர் வீட்டிற்கு வந்து உணவருந்திவிட்டு பின்னர் பள்ளிக்கு சென்றுள்ளனர்.
இந்த இரு மாணவர்களும் ஒருவரையொருவர் விளையாட்டாக அடித்தும், தள்ளிவிட்டும் விளையாடியுள்ளனர். இந்த விளையாட்டு ஒரு கட்டத்தில் மோதலாக மாறி தள்ளுமுள்ளு ஏற்பட்டு, ஒருவரை ஒருவர் கழுத்தை நெரித்துக் கொண்டு சண்டை போட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதில் திருமால் வகுப்பறையில் மயக்கம் அடைந்துள்ளார்.
இதுகுறித்து பள்ளி ஆசிரியர்களுக்கு தகவல் தெரிந்தவுடன் ஆம்புலன்ஸ் மூலம் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மாணவனை பரிசோதித்த மருத்துவர்கள் உயிரிழந்தாகத் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து மாணவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இதற்கிடையே இறந்த மாணவரின் உறவினர்கள், கொலை செய்த மாணவனை உடனடியாக கைது செய்ய வேண்டும் எனக்கோரி அல்லிநகரம் பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதன் காரணமாக தேனி - பெரியகுளம் பகுதியில் கடுமையாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து மறியல் கைவிடப்பட்டது. இதற்கிடையே மாணவனைத் தாக்கிய சக மாணவர் சக்திவேலை அல்லிநகரம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அல்லிநகரம் பகுதியில் அதிகளவில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிக்கலாமே: மேற்கு வங்கத்தில் அமித்ஷா பேரணியில் கலவரம்! பாஜகவினர் கடும் கண்டனம்