தேனி-பெரியகுளம் சாலையில் இளங்கோவன் டிரேடர்ஸ் என்ற நிறுவனம் இயங்கி வருகிறது. இங்கு உணவுப் பொருட்கள், குளிர்பானங்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் அந்நிறுவனத்தின் விற்பனை பொருட்களை வைப்பதற்காக குடோன் இயங்கி வருகிறது.
இங்கு தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட பான்மசாலா, குட்கா உள்ளிட்ட பொருட்களை பதுக்கி வைக்கப்ட்டுள்ளதாக, மாவட்ட உணவுப் பாதுகாப்புத்துறை அலுவலர்களுக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற உணவுப் பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர் கருணாகரன் தலைமையிலான அலுவலர்கள் ஆய்வு செய்தனர்.
அப்போது பான்மசாலா, குட்கா உள்ளிட்ட ஏழு பாக்கெட்டுகளை கண்டதால் சந்தேகம் அடைந்த அதிகாரிகள், அருகிலிருந்த மற்றொரு கிடங்கிலும் ஆய்வு மேற்கொண்டனர். அங்கு வைக்கப்பட்டிருந்த பெட்டிகளில் பிஸ்கெட் பாக்கெட்களுடன் சேர்த்து அரசால் தடைசெய்யப்பட்ட பான்மசாலா, குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து கைப்பற்றப்பட்ட ஏழு கிலோ மதிப்புள்ள போதைப் பொருட்களுடன் கிடங்கிற்கு சீல் வைத்து அதிகாரிகள் அந்நிறுவன உரிமையாளரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.