தேனி: திருச்செந்தூர் ரயில் நிலையம் அருகே தங்கும் விடுதியில் நேற்று (மார்ச் 04) ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரர் ஓ.ராஜா சசிகலாவை சந்தித்தார்.
இந்த திடீர் சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், இன்று அதிமுகவில் இருந்து ஓ.ராஜா உள்பட நான்கு பேர் இன்று (மார்ச் 5) அதிரடியாக நீக்கப்பட்டனர்.
இந்நிலையில், தான் எம்ஜிஆர் காலத்தில் அதிமுகவில் இணைந்தவன் எனவும் என்னைக் கட்சியை விட்டு நீக்கும் அதிகாரம் யாருக்கும் இல்லை என்றும் ஓ.ராஜா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது, "அதிமுகவின் பொதுச்செயலாளராக சசிகலாவை நான் மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்கிறேன். எம்ஜிஆர் காலத்தில் அதிமுகவில் இணைந்த என்னை நீக்கும் அதிகாரம் ஓபிஎஸ், இபிஎஸ்க்கு இல்லை. என்னைக் கட்சியை விட்டு நீக்கும் அதிகாரம் சின்னம்மா (சசிகலா) ஒருவருக்கு மட்டும்தான் உள்ளது.
இதுசம்பந்தமாக, சின்னம்மாவிடம் நாங்கள் கலந்துபேசி நல்ல முடிவை எடுப்போம். சின்னம்மாவை கழக உறுப்பினர் என்ற முறையில் சந்தித்தேன். இதற்கு ஓபிஎஸ், இபிஎஸ் ஆகியோரிடம் சொல்ல வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. சின்னம்மா தலைமையில் கட்சி ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். இதுவே எனது விருப்பம். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தொண்டர்களின் விருப்பமும் இதுதான்" என்றார்.
இதையும் படிங்க: மின்னல் வேகத்தில் பைக் ஓட்டும் இளைஞர்களுக்கு கடிவாளம் போட்ட நெல்லை காவல்துறை!