தேனி மாவட்ட நகர காவல் நிலையத்தில் பணியாற்றும் ஆய்வாளர், சார்பு ஆய்வாளர்கள் உள்ளிட்ட 10 காவல் துறையினர் கரோனா நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தனர்.
இந்நிலையில் சிகிச்சை முடிந்து அவர்கள் அனைவரும் குணமடைந்து மீண்டும் நேற்று (செப்டம்பர் 8) பணிக்குத் திரும்பினர். அவர்களுக்கு திண்டுக்கல் சரக காவல் துறை துணைத் தலைவர் முத்துச்சாமி பாராட்டுச் சான்றிதழ் வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.
தேனி நகர் காவல் நிலையத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் பேசிய டி.ஐ.ஜி, கரோனாவிலிருந்து மீண்டவர்கள் ஆரோக்கியமான உணவுகள், ஆர்கானிக் மருந்துகளை எடுத்துக் கொள்ள வேண்டும். வாரத்தில் மூன்று நாள்களுக்கு கபசுரக் குடிநீர் அருந்த வேண்டும் எனப் பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.
மேலும் நோய்த் தொற்றால் மீண்டு, பணிக்குத் திரும்பிய காவலர்களுக்கு 14 நாள்கள் இரவுப்பணிகள் வழங்க வேண்டாம் எனவும் உத்தரவிட்டார். அவ்வாறு விலக்களிக்கப்படும் காவலர்கள் இரவில் செல்போன் உபயோகிப்பதை தவிர்த்து நன்றாக உறங்கினால் உடல் ஆரோக்கியமாக இருக்கும் எனத் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய்சரண் தேஜஸ்வி, துணைக் கண்காணிப்பாளர் முத்துராஜ் உள்பட காவல்துறையினர் பலர் உடனிருந்தனர்.