தேனி மாவட்டம் பெரியகுளம் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊராட்சிகளில் குடியிருப்பு பகுதிகளுக்கான புதிய குடிநீர் குழாய் இணைப்பிற்கு ரூ. 6 ஆயிரம் முதல் 15 ஆயிரம் வரை கட்டணமாக வசூல் செய்யப்படுவதாக புகார் எழுந்தது. இந்நிலையில், ஊராட்சியின் இச்செயலைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் பெரியகுளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
அங்கு அவர்கள் குடிநீர் குழாய் இணைப்பிற்கு கூடுதல் வசூல் செய்யும் ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர். திடீரென ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்குள் நுழைய முயன்ற கம்யூனிஸ்ட் கட்சியினரை காவல்துறையினர் தடுத்தனர்.
காவல்துறையினரின் தடையை மீறி சிலர் அலுவலகத்தில் நுழைந்தனர். அவர்களை வலுக்கட்டாயமாக வெளியே அப்புறப்படுத்திய காவல்துறையினர் அலுவலக கதவை அடைத்தனர்.
ஒரு கட்டத்தில் இரு தரப்பினருக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் அங்கு பதற்றமான சூழல் நிலவியது. பின்னர் அலுவலக வாயிலில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டவர்களுடன் ஊராட்சி அலுவலர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.
இதையும் படிங்க: வீடுகளில் கறுப்பு கொடி கட்டி பொதுமக்கள் போராட்டம்!