மரங்கள் இல்லையேல்! மனிதர்கள் இல்லை! அப்படி இருக்கையில் சுற்றுச்சூழலை பாதிக்கும் விதமாக மனிதன் எண்ணற்ற தவறுகளை செய்து வருகிறான். அதில் ஒன்று தன் சுயலாபத்திற்காக நிழல் தரும் மரங்கள் மீது ஆணிகள் அடித்து விளம்பரப் பலகைகளை பொருத்துவது. இவ்வாறு மரத்தில் ஆணி அடித்தால் மரத்திற்கு வேரிலிருந்து கிடைக்கும் சத்துகள் தடைபடுவதோடு மட்டுமல்லாமல், மரத்தின் தோற்றம் மாறுவதற்கு வாய்ப்புள்ளது. அதுமட்டுமின்றி மரம் பட்டுப் போவதற்கும் அதிக வாய்ப்புகள் உள்ளது. இதன் காரணமாக சுற்றுச்சூழல் அதிகமாக பாதிப்படைகின்றது.
இந்நிலையில் சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்காக தேனியில் களமிறங்கியுள்ளனர் இளைஞர்கள் குழு. தேனி மாவட்டத்தில் பல்வேறு அமைப்புகள் சுற்றுச்சூழல் சார்ந்த விஷயங்களில் இயங்கிக் கொண்டிருக்கின்றனர். அவர்களை ஒன்றிணைத்து ஒரு குழுவை தொடங்கி கடந்த நவம்பர் 17ஆம் தேதி முதல் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையன்றும் மரங்களில் அடிக்கப்பட்டுள்ள ஆணிகளை பிடுங்குவதை திருவிழாவாக கொண்டாடி வருகின்றனர் இக்குழுவினர்.
இந்த குழுவினர் மரங்களில் அடிக்கப்பட்டுள்ள ஆணிகளை பிடுங்குவதோடு மட்டுமல்லாமல், ஆணி அடிக்கப்பட்டிருந்த தடங்களில் மஞ்சள் மற்றும் வேப்ப எண்ணெயும் தடவி மரத்தின் ஆயுளை அதிகரிக்கச் செய்கின்றனர். மேலும் மரங்களில் ஆணி அடிப்பதை தடுக்கும் விதமாகவும் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
தொடர்ந்து 34 வாரங்களாக தேனி மாவட்டத்தில் ஆணி பிடுங்கும் திருவிழாவை நடத்தி வரும் இக்குழுவினருடன் இணைந்து புதுமணத்தம்பதியினரும் மரங்களில் அடிக்கப்பட்டுள்ள ஆணிகளை பிடுங்கினர். இந்த தம்பதியினர் தேனி மாவட்டம் கோம்பை அருகே உள்ள ரெங்கநாதபுரத்தைச் சேர்ந்த குமரேசன்-சோனியா ஆகும்.
இதையும் படிங்க...நித்யானந்தா நீதிமன்ற பிணை ரத்து