சென்னை: ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் பகுதியைச் சேர்ந்த 35 மீனவர்கள், 3 விசைப்படகுகளில் கடந்த ஆகஸ்ட் மாதம் கடலில் மீன் பிடிக்கச் சென்றனர். அப்போது, ஆகஸ்ட் 9ஆம் தேதி அதிகாலை மீனவர்கள் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கை கடற்படையினர் ரோந்து கப்பல் வந்து தமிழக மீனவர்களின் 3 விசைப்படகுகளையும் சுற்றி வளைத்து, எல்லை தாண்டி வந்து மீன் பிடித்ததாகக் குற்றம் சாட்டி 35 மீனவர்களையும் கைது செய்து அவர்களின் 3 விசைப் படகுகளையும் பறிமுதல் செய்தனர்.
பின்னர், இலங்கை நீதிமன்றத்தில் மீனவர்களை ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் கடந்த டிசம்பர் 8ஆம் தேதி ராமநாதபுரம் மாவட்டம் அக்கா மடத்தைச் சேர்ந்த 6 மீனவர்கள் விசைப்படகு ஒன்றில் சென்று கடலில் மீன் பிடித்துக் கொண்டு இருந்தனர். அப்போது இலங்கை கடலோர ரோந்து கப்பல் வந்து விசைப்படகையும் சுற்றி வளைத்து 6 மீனவர்களையும் கைது செய்து விசைப்படகையும் பறிமுதல் செய்து இலங்கைக்குக் கொண்டு சென்றனர். அவர்களையும் இலங்கை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திச் சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி கடிதங்கள் எழுதினார். இதையடுத்து, இலங்கையில் உள்ள இந்தியத் தூதரக அதிகாரிகள் இலங்கை அரசு அதிகாரிகளிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தைகள் நடத்தி வந்தனர்.
இதையும் படிங்க: "டெல்லியை விட.. தமிழ்நாடு தான் பெண்களுக்கு பாதுகாப்பானது!" - அளுநர் ஆர்.என் ரவி பேச்சு!
இதனைத் தொடர்ந்து, கடந்த சில தினங்களுக்கு முன்பு இலங்கை நீதிமன்றம் தமிழக மீனவர்கள் 41 பேரையும் விடுதலை செய்து இந்தியத் தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். பின், இந்தியத் தூதரக அதிகாரிகள் 41 மீனவர்களையும் தங்களுடைய பராமரிப்பில் வைத்து அவர்களை இந்தியாவுக்குத் திருப்பி அனுப்புவதற்கான ஏற்பாடுகளைச் செய்தனர்.
மீனவர்களுக்கு பாஸ்போர்ட்கள் இல்லாததால் இவர்கள் விமானம் மூலம் இந்தியா திரும்புவதற்கு வசதியாக 41 மீனவர்களுக்கும் அவசரக்காலம் சான்றிதழ்களை இந்தியத் தூதரக அதிகாரிகள் வழங்கினர். மேலும் 41 மீனவர்களுக்கும் விமான டிக்கெட்டுகள் ஏற்பாடுகளையும் தூதராக அதிகாரிகள் செய்தனர்.
இந்த நிலையில், நேற்று நள்ளிரவு இலங்கை தலைநகர் கொழும்பில் இருந்து சென்னைக்கு வரும் ஏர் இந்தியா பயணிகள் விமானத்தில் 41 மீனவர்களும் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்நிலையில், இன்று (ஜன.22) சென்னை விமான நிலையத்தில் தமிழ்நாடு மீன்வளத்துறை அதிகாரிகள் மீனவர்களை வரவேற்றனர். பின், தமிழ்நாடு அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட வாகனங்கள் மூலம் மீனவர்கள் 41 பேரும் அவரவர் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.