தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள மஞ்சளார் அணைக்கு மேல் உள்ள ராசிமலை வனப்பகுதியில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக பழங்குடியின மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு பல ஆண்டுகளாக முறையான குடியிருப்புகள் இல்லாமல் தவித்துவந்தனர். அவர்கள் கட்டியிருந்த வீடுகளும் இடிந்து விழும் நிலையில் இருந்தன. இதனால் அரசு புதிய வீடுகள் கட்டி கொடுக்க வேண்டும் என்று பழங்குடியின மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்த கோரிக்கையை ஏற்று 2018ஆம் ஆண்டு அப்போதைய அதிமுக அரசால் இடிந்து விழுந்த நிலையில் உள்ள வீடுகள் அனைத்தையும் இடித்துவிட்டு குடிசை மாற்று வாரியத்தின் மூலம் 3 கோடியே 45 லட்ச ரூபாய் செலவில் புதிதாக கான்கிரீட் வீடுகள் கட்டுவதற்கு ஒப்பந்தம் போடப்பட்டு 32 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டன.
கட்டி முடிக்கப்பட்டு ஓராண்டாகியும் அவர்களிடம் வீடுகள் வழங்காத நிலையில் குடிசையில் வாழ்ந்து வந்தனர். இந்த நிலையில் நேற்று (ஜனவரி 8) வீடுகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் பெரியகுளம் சட்டப்பேரவை உறுப்பினர் சரவணகுமார், திமுக மாவட்ட செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு பயனாளிகளிடம் வீடுகளை ஒப்படைத்தனர்.
இதையும் படிங்க: 'மண் பானை செய்யும் பணியாளர்களின் வாழ்வாதாரத்தைக் காக்க வேண்டும்' - தொழிலாளர்கள் கோரிக்கை