தேனி மாவட்டம் பழனிசெட்டிபட்டியைச் சேர்ந்தவர் கிருஷ்ணன்(32). அதே பகுதியில் உள்ள தனியார் பேட்டரி விற்பனை நிலையத்தில் பணிபுரிந்துவருகிறார். இவருக்கும் ஆண்டிபட்டி அருகில் உள்ள சக்கம்பட்டியைச் சேர்ந்த ப்ரீத்தி என்ற பெண்ணிற்கும் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
திருமணம் ஆன ஒரே வாரத்தில் கணவன், மனைவி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்ப்பட்டதன் காரணமாக ப்ரீத்தி தனது தந்தை விட்டிற்கு சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் தேனி புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள பெரியகுளம் புறவழிச் சாலையில் இரு சக்கர வாகனத்தில் வந்த கிருஷ்ணன் வாகனத்தில் இருந்த பெட்ரோலை உடலில் ஊற்றிக்கொண்டு தீ வைத்துக்கொண்டார்.
இதனையடுத்து மளமளவென அவரது உடலில் தீ பற்றி எரிந்தது. இதைக்கண்ட அவ்வழியாக சென்ற பொதுமக்கள் தீயை அணைத்து சிகிச்சைக்காக தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவரை அனுமதித்துள்ளனர். உடலில் 80 விழுக்காடு தீக்காயங்களுடன் அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.
இதனைத் தொடர்ந்து, தற்கொலை முயற்சிக்கான காரணம் குறித்து கிருஷ்ணன் உடன் பணிபுரியும் சக ஊழியர்களிடம் கேட்டதற்கு, கிருஷ்ணன் திருமண வாழ்வில் ஈடுபாடு இல்லாமல் இருந்துள்ளதாகவும், இதனால் கணவன் மனைவி இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு தற்கொலைக்கு முயன்றிருக்கலாம் எனவும் தெரிவித்தனர்.
மேலும், திருமணம் ஆன இரண்டே மாதத்தில் புது மாப்பிள்ளை தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெறும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து தேனி நகர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.