'நீட்' தேர்வில் ஆள்மாறாட்ட புகாரில் கைது செய்யப்பட்ட மாணவர் உதித் சூர்யா மற்றும் அவரது தந்தைக்கு தேனியில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணை நடைபெற்றுவந்தது.
சிபிசிஐடி எஸ்.பி விஜயகுமார் தலைமையில் நடைபெற்ற விசாரணையில், நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததாக மாணவர் உதித் சூர்யா, அவரது தந்தை வெங்கடேசன் ஒப்புக்கொண்டனர். இதனைத் தொடர்ந்து இருவர் மீதும் கூட்டுச்சதி, ஆவணங்களை திருத்தி மோசடி செய்தல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளில் சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
தேனி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்னர் நீதிபதி உத்தரவின் பேரில் மதுரை மத்திய சிறையில் இவர்களை அடைத்தனர். இதற்கிடையே மாணவர் உதித் சூர்யாவிற்கு மட்டும் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நிபந்தனை ஜாமீன் வழங்கியது.
மாணவரின் தந்தை வெங்கடேசன் ஜாமின் மனு தள்ளுபடி செய்யபட்டது. இந்நிலையில் சிறையில் இருந்த வெங்கடேசனின் நீதிமன்றக்காவல் நேற்றுடன் முடிவடைந்ததையடுத்து இன்று தேனி நீதிமன்றத்தில் அவரைக் காவல்துறையினர் ஆஜர்படுத்தினர்.
வழக்கை விசாரித்த தேனி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி பன்னீர்செல்வம், மருத்துவர் வெங்கடேஷனுக்கு மூன்றாவது முறையாக 15 நாள் நீதிமன்றக் காவலை நீட்டித்து வரும் நவம்பர் 21ஆம் தேதி மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டார். இதனையடுத்து மதுரை மத்திய சிறையில் அடைப்பதற்கு வெங்கடேசனை தகுந்த பாதுகாப்புடன் காவல்துறையினர் அழைத்துச் சென்றனர்.
இதையும் படிங்க: நீட் ஆள்மாறட்டத்தை தடுக்க கைரேகை பதிய வேண்டும் -உயர் நீதிமன்றம் உத்தரவு!