நீட் தேர்வு ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்ட மாணவர் உதித்சூர்யா கைதுக்குப் பின், பல இடங்களில் ஆள்மாறாட்டம் நடைபெற்றதாக கூறப்பட்டது. அதன்படி வேலூர் மாவட்டம் வாணியம்பாடியைச் சேர்ந்த முகமது இஃர்பான் நீட் தேர்வின்போது ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து இர்ஃபானின் தந்தை முகமது சபியை சிபிசிஐடி காவல் துறையினர் கைதுசெய்து விசாரணைமேற்கொண்டனர். பின்னர் மாணவர் இர்ஃபான் நீதிமன்றத்தில் சரணடைந்தார். அவரை வரும் 9ஆம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
முகமது சபியை விசாரித்ததில், மூன்று ஆண்டுகள் மட்டும் மருத்துவப் படிப்பு படித்துவிட்டு முறையாக பட்டம் பெறாமல் வாணியம்பாடி, திருப்பத்தூர் ஆகிய இடங்களில் மருத்துவமனை நடத்தி வந்தது தெரியவந்துள்ளது எனவும், போலி மருத்துவராக செயல்பட்டு வந்த முகம்மது சபி தனது மகனையும் ஆள்மாறாட்டம் செய்து மருத்துப் படிப்பில் சேர்த்துள்ளார் எனவும் சிபிசிஐடி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
முதற்கட்ட விசாரணை முடிந்து இன்று தேனி முதன்மை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் சிபிசிஐடியினரால் ஆஜர்படுத்தப்பட்டார். இதையடுத்து முகம்மது சபியை வரும் அக்டோபர் 16ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி பன்னீர்செல்வம் உத்தரவிட்டார். குற்றவாளி முகமது சபியை தகுந்த பாதுகாப்புடன் தேனி மாவட்ட சிறைக்கு சிபிசிஐடியினர் அழைத்துச் சென்றனர்.
இதையும் படிக்கலாமே: நீட் தேர்வு ஆள்மாறாட்டத்தில் சிக்குகிறார் தேனி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் ?