நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததாக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மாணவன் இர்பான் மீது குற்றச்சாட்டு எழுந்தது. தலைமறைவாக இருந்த இர்பான், கடந்த ஒன்றாம் தேதி சேலம் நீதிமன்றத்தில் சரணடைந்தார். அப்போது அவரை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
இது குறித்து வழக்கை விசாரித்து வந்த தேனி சிபிசிஐடி காவல் துறையினர் இர்பான் படித்துவந்த தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் உள்பட கல்லூரி குழுவினரிடம் மேற்கொண்ட விசாரணையில், ஆள்மாறாட்டம் செய்திருப்பது உறுதியானது.
கடந்த 9ஆம் தேதி தேனி மாவட்டத்திற்கு இர்பான் கொண்டுவரப்பட்டு அன்றைய தினம் தேனி நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நீதிபதி பன்னீர்செல்வம் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார். பின் அவர் தேனி மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில் நீதிமன்ற காவல் நேற்று முடிவடைந்ததை அடுத்து இன்று நீதிமன்றத்தில் இர்பான் ஆஜர்படுத்தப்பட்டார். இதன் மீதான வழக்கை விசாரித்த தேனி நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி பன்னீர்செல்வம் இர்பானுக்கு மேலும் 10 நாள் நீதிமன்ற காவலை நீட்டித்தும், வரும் 25ஆம் தேதி இர்பானை ஆஜர்படுத்த உத்தரவிட்டார்.
இதனையடுத்து தேக்கம்பட்டியில் உள்ள தேனி மாவட்ட சிறைக்கு மாணவர் இர்பான் அழைத்துச் செல்லப்பட்டார்.
இதையும் படிக்கலாமே: நீட் தேர்வு முறைகேடு எதிரொலி: மாணவர்களின் கைரேகையை சோதனை செய்ய முடிவு!