நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் தேனி அரசு மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த மாணவன் உதித்சூர்யா, அவரது தந்தை மருத்துவர் வெங்கடேசன் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர். இதுவரை ஆறு மாணவர்கள், ஆறு பெற்றோர், ஒரு இடைத்தரகரென மொத்தம் 13 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் நேற்று கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த சென்னை எஸ்ஆர்எம் கல்லூரி மாணவர் பவித்ரன், இடைத்தரகர் ஆறுமுகம் ஆகியோர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மற்றவர்களுக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. அதைத்தொடர்ந்து கைது செய்யப்பட்ட மாணவன் பவித்ரனுக்கு ஆள்மாறாட்டத்தில் மேலும் ஒரு இடைத்தரகராக செயல்பட்ட கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த மனோகரன் என்பவரை சிபிசிஐடியினர் இன்று கைது செய்துள்ளனர்.
தற்போது அவர், தேனி சமதர்மபுரம் சிபிசிஐடி அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறார். இவருக்கும் முக்கிய இடைத்தரகர் ரசீத்திற்கும் நேரடி தொடர்பு இருப்பதாக சிபிசிஐடியினர் விசாரணையில் தெரியவந்துள்ளது. விசாரணை முடிவில் முக்கிய இடைத்தரகர் ரசீத் குறித்த தகவல்கள் கிடைக்கும் என சிபிசிஐடி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க: 'நீட் தேர்வால் கஷ்டப்படுவது நாங்கள்தான்' - அமைச்சர் செங்கோட்டையன் காட்டம்