தேனி: எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., சித்தா உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளில் மாணவர்கள் சேர நீட் தேர்வு நடத்தப்படுகிறது. கடந்த 2019-ஆம் ஆண்டு நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டு சேர்ந்த உதித் சூர்யா என்ற மாணவர் ஆள்மாறாட்டம் செய்து தேர்வானது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுகுறித்து வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. வழக்குத் தொடர்பாக 7 மாணவர்கள், அவர்களின் பெற்றோர்கள் மற்றும் 4 இடைத்தரகர்கள் உள்பட 18 பேரை சி.பி.சி.ஐ.டி போலீசார் கைது செய்து விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்தனர்.
ஏறத்தாழ இரண்டு ஆண்டுகளாக வழக்கில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாமல் காணப்பட்ட நிலையில், தற்போது சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணையைத் துரிதப்படுத்தி உள்ளனர்.
இந்நிலையில், வழக்குத் தொடர்பாக சென்னையில் வசித்து வரும் பீகாரைச் சேர்ந்த கிருஷ்ண மூராரே என்பவரை தேனி சி.பி.சி.ஐ.டி போலீசார் 2 நாட்களுக்கு முன் கைது செய்தனர். மேலும் அவரை நீதிமன்றக் காவலில் எடுத்து தேனி சி.பி.சி.ஐ.டி டி.எஸ்.பி சரவணன் தலைமையிலான அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
பீகாரைச் சேர்ந்த மேலும் இருவர் ஆள்மாறாட்ட வழக்கில் தொடர்பில் இருப்பது தெரிய வந்ததாக போலீசார் கூறியுள்ளனர். இதையடுத்து பீகாரைச் சேர்ந்த ஷாகித் சின்ஹா, ரகுவஸ் மணி ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர்.
கைதான இருவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், எஜுகேஷன் கன்சல்டிங் ஏஜென்சி(Education Consulting Agency) என்ற பெயரில் நிறுவனம் நடத்தி போலியான நபர்களைத் தேர்வு எழுத வைத்து ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டது தெரிய வந்ததாக போலீசார் கூறினர். வழக்கில் வேறுயாரேனும் தொடர்பில் இருந்தார்களா என தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாக சி.பி.சி.ஐ.டி போலீசார் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: இந்திய-சீன ராணுவத்தினருக்கு இடையே மோதல்