தென் மாவட்டங்களுக்கு முக்கிய நீராதாரமாக முல்லைப் பெரியாறு அணை இருக்கிறது. இந்த அணையிலிருந்து திறக்கப்படும் நீரானது மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், தேனி மாவட்டங்களின் விவசாயங்களுக்குப் பயன்பட்டுவருகிறது. இந்நிலையில் முல்லைப் பெரியாறு அணையிலிருந்து திறக்கப்படும் நீரை முல்லைப் பெரியாற்றுப் படுகையில் ஒரு சிலர் சட்டவிரோதமாக மோட்டார்கள் மூலர் திருடிவருகின்றனர் எனக் குற்றச்சாட்டுஎழுந்தது.
இது பற்றி தேனியைச் சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் அன்பு வடிவேலு கூறுகையில், "முல்லை ஆற்றுப்படுகையில் சிலர் மோட்டார்கள் அமைத்து தண்ணீரைத் திருடிவருகின்றனர். மேலும் அரசியல்வாதிகளின் ஆதரவோடு சில நிறுவனங்கள் தண்ணீர் திருட்டில் ஈடுபடுகின்றன.
ஆற்றின் முக்கிய வழித்தடங்களான சீலையம்பட்டி, உப்புக்கோட்டை, வீரபாண்டி, சத்திரப்பட்டி, வயல்பட்டி, அரண்மனைப்புதூர் போன்ற இடங்களில் மோட்டர்கள் அமைத்து தண்ணீர் திருட்டு நடைபெறுவதால் முல்லை ஆற்றில் திறக்கப்படும் நீரானது கடைமடைப்பகுதிக்கு செல்வதில்லை.
இதனால் மிகவும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உண்டாகிறது. எனவே இது குறித்து பொதுப்பணித் துறை அலுவலர்கள், மாவட்ட நிர்வாகம் கள ஆய்வு செய்து தண்ணீர் திருட்டில் ஈடுபடுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும்" என வலியுறுத்தியுள்ளார்.