தேனி: தேனி மாவட்டம், கம்பம் அருகே கூடலூர் லோயர்கேம்ப் முல்லைப் பெரியாற்றிலிருந்து 18ஆம் கால்வாயில் பாசனத்திற்காகத் தண்ணீர் திறந்து விடக்கோரி தமிழக அரசுக்கு 18ம் கால்வாய் பாசன விவசாயிகள் பல்வேறு போராட்டங்களை நடத்தினர்.
இந்நிலையில் தமிழக முதலமைச்சரின் ஆணைப்படி, 18ம் கால்வாய்க்குத் தண்ணீர் திறப்பதற்கு அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இதனையடுத்து ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி முல்லைப் பெரியாற்றிலிருந்து தண்ணீர் திறப்பதற்காக லோயர்கேம்ப் பகுதிக்கு வந்து மதகுப்பகுதியில் தண்ணீரினை திறந்து வைத்தார். வினாடிக்கு 98 கன அடி தண்ணீர் வீதம், 30 நாட்களுக்குத் தண்ணீரைத் திறந்து வைத்தார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, "இந்த தண்ணீர் திறப்பதன் மூலம், தேவாரம் பகுதியில் உள்ள 44 கண்மாய்கள் மூலம் 4614.25 ஏக்கர் விவசாய பாசன பரப்பு நிலங்கள் பாசன வசதி பெறும்.
மேலும், உத்தமபாளையம் தாலுகாவில் உள்ள 21 கண்மாய்கள் வாயிலாக 2045.35 ஏக்கர் விவசாய பாசன பரப்பு நிலங்கள் மற்றும் போடி நாயக்கனூர் தாலுகாவில் உள்ள 23 கண்மாய்கள் வாயிலாக 2568.90 ஏக்கர் விவசாய பாசன நிலங்கள் பாசன வசதி பெற்று பயன் பெறுகின்றன.
பயன் பெறும் பகுதிகள்: புதுப்பட்டி, அனுமந்தன் பட்டி, பண்ணைப்புரம், கோம்பை, தேவாரம், மீனாட்சிபுரம், டொம்புச்சேரி உள்ளிட்ட 13 கிராமங்கள் பயன் பெறும். இந்த நிகழ்ச்சியில் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சரவணகுமார், வடக்கு மாவட்டச் செயலாளர் தங்கத் தமிழ்ச்செல்வன், துறை அதிகாரிகள் மற்றும் 18ஆம் கால்வாய் விவசாய சங்கத்தினர், அரசு பொதுப்பணித்துறை உதவி கோட்டப் பொறியாளர்கள் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: தூத்துக்குடி கனமழை வெள்ளத்தால் இதுவரை 3 பேர் இறந்துள்ளனர் - மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி தகவல்!