தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் பழனிசாமி, பெரியாறு அணை கட்டிய கர்னல் ஜான் பென்னி குயிக் பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் என அறிவிப்பு வெளியிட்டதற்கு தேனி மாவட்ட விவசாயிகள் நன்றி தெரிவித்தனர்.
இந்த முல்லைப் பெரியாறு அணை தேனி, மதுரை, ராமநாதபுரம், திண்டுக்கல் உள்பட ஐந்து மாவட்டங்களுக்கு வாழ்வாதாரமாக இருந்துவருகிறது.
முல்லைப் பெரியாறு அணை உருவான விதம்:
“நீரின்றி அமையாது உலகு” என்பது திருவள்ளுவர் வாக்கு. தென் தமிழகத்தில் கி.பி.18-ம் நுாற்றாண்டில் கடுமையான வறுமை நிலவியது. இதைக் கண்டு மனம் வருந்திய ஆங்கிலப் பொறியாளர் கர்னல் ஜான் பென்னிகுயிக், மேற்குத் தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகி வீணாக அரபிக்கடலில் கலந்த முல்லையாற்றை, பெரியாற்றின் குறுக்கே இணைத்து அணை கட்ட முடிவு செய்தார்.
அணை கட்டுவதற்கான பணிகள் 1893-ம் ஆண்டு துவங்கிய நேரத்தில் பலமுறை இயற்கைப் பேரிடர்கள் ஏற்பட்டது. இதனால், அணைக்கட்ட ஒதுக்கப்பட்ட நிதி முழுவதும் செலவானது. இதனையடுத்து, ஆங்கில அரசு இத்திட்டத்தை கைவிடுமாறு கர்னலிடம் கேட்டது.
ஆனால் எதைப்பற்றி கவலைப்படாமல், தன்னுடைய சொத்துகள், மனைவியின் நகைகள் முழுவதையும் விற்று முழுநம்பிக்கையுடன் இந்த முல்லைப்பெரியாறு அணையைக் கட்டினார்.
அணையைக் கட்டி முடித்து 1895-ம் ஆண்டு மக்கள் பயன்பாட்டிற்காக அர்ப்பணித்தார் கர்னால் ஜான் பென்னிகுயிக். தற்போது கேரள மாநிலம் தேக்கடியில் அமைந்துள்ள இந்த முல்லைப்பெரியாறு அணையானது, தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்ட மக்களின் குடிநீர், பாசன வசதியைப் பூர்த்தி செய்கிறது.
கர்னலை மனிதக் கடவுளாகக் கொண்டாடும் மக்கள்:
இந்நிலையில், கர்னல் ஜான் பென்னி குயிக் பிறந்த நாளான ஜனவரி 15-ம் தேதியை தேனி மாவட்ட மக்கள் அனைவரும் சதம், மத வேறுபாடின்றி கடவுளாக அவரை வழிபட்டு கொண்டாடி வருகின்றனர்.
அவரது பிறந்தநாளை சமத்துவப் பொங்கலாக தேனி மாவட்டம் அருகில் உள்ள பாலார்பட்டி கிராம மக்கள் ஆண்டுதோறும் கொண்டாடி வருகின்றனர். முல்லைப்பெரியாறு என்றால் கர்னல் ஜான் பென்னி குயிக்தான் எல்லோரின் நினைவுக்கும் முதலில் வரும். அந்த அணையைக் கட்ட அவர் செய்த தியாகங்களை மக்கள் மறக்காதவகையில், “தாகம் தீர்த்த தந்தையாக” மனித கடவுளாக வழிபட்டு வருகின்றனர்.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, கர்னலை கவுரவிக்கும் வகையில் கடந்த 2013-ம் ஆண்டு தேனியில் புதிதாக கட்டப்பட்ட பேருந்து நிலையத்திற்கு அவரின் பெயரை வைத்தார். அதைத்தொடர்ந்து, 2014-ம் ஆண்டு, தேனி மாவட்டம் கூடலுார் அருகே உள்ள லோயர்கேம்பில் மணிமண்டபம் எழுப்பி கர்னலுக்கு வெண்கல சிலையும் நிறுவினார்.
தமிழக அரசு அறிவிப்பு:
கம்பம் பள்ளத்தாக்கு விவசாயிகள், பொதுமக்கள் அனைவரும் கர்னலின் பிறந்தநாளை அரசு விழாவாகக் கொண்டாட வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இந்த நிலையில், நேற்று (பிப்.14) கூடிய தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி 110 விதியின்கீழ், முல்லைப்பெரியாறு அணையைக் கட்டிய கர்னல் ஜான் பென்னி குயிக்கின் பிறந்தநாள் தமிழக அரசு சார்பில், அரசு விழாவாகக் கொண்டாடப்படும் என அறிவித்தார்.
அரசின் இந்த அறிவிப்புக்கு கம்பம் பள்ளத்தாக்கு விவசாயிகள், தேனி மாவட்ட பொதுமக்கள் வரவேற்பும், நன்றியும் தெரிவித்துள்ளனர்.
பொதுமக்களின் கோரிக்கை:
இதுகுறித்து பொதுமக்கள் விவசாயிகள் கூறுகையில், காலம் கடந்து வந்து அரசின் இந்த அறிவிப்பு வரவேற்கத்தக்கது. முல்லைப் பெரியாறு அணையின் நீரானது கடைக்கோடிப் பகுதியான ராமநாதபுரம் வரை செல்ல வேண்டும் என்பதே பென்னி குயிக் லட்சியம். அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்தினால்தான் அவரின் கனவு மெய்ப்படும்.
கர்னலின் பிறந்தநாளை அரசு விழாவாகக் கொண்டாடுவதற்கு தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டதுடன், அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
முல்லைப் பெரியாறு அணைகட்டுமானத்தின்போது அவர் பயன்படுத்திய பொருட்கள் தற்போது அணைப்பகுதியில் சிதிலமடைந்து கிடக்கிறது. அவற்றை மீட்டு அருங்காட்சியகத்தில் வைக்க வேண்டும்.
மேலும், முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பதற்காக செல்லுகின்ற அமைச்சர்கள், அதிகாரிகள் அனைவரும் லோயர்கேம்ப் மணிமண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ள பென்னி குயிக் சிலைக்கு மரியாதை செலுத்தி கவுரவிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.