தேனி: தேனி மாவட்ட ஆட்சியராக இருந்து வரும் முரளிதரன் பெயரில் முக்கியப் பிரமுகர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்களுக்கு, கடந்த சில நாட்களாக முரளிதரனின் புகைப்படத்தை முகப்புப்பக்கமாக வைத்து நலம் விசாரிப்பது போல குறுங்தகவல்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
பின்னர் அவர்களிடம் பணம் கேட்டுள்ளது அந்த கும்பல், இது பற்றி தகவல் அறிந்ததும் தேனி மாவட்ட ஆட்சியர் தனது பெயரில் போலியான வாட்ஸ்அப் கணக்கு தொடங்கி, அதன் மூலமாக பணம் கேட்கும் சம்பவம் நடந்து வருவது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்குத் தகவல் அளித்தார். இதையடுத்து சைபர் கிரைம் காவல் துறையினர் இது குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் மீண்டும் மாவட்ட ஆட்சியர் முரளிதரன் பெயரில் 7207912008 என்ற எண்ணில் மாவட்ட ஆட்சியர் முரளிதரன் முகப்பு படத்தை வைத்து, ஒரு கும்பல் தேனி மாவட்டத்தில் உள்ள ஊராட்சி மன்றத்தலைவர்களுக்கு குறுங்தகவல் அனுப்பி பணம் கேட்டு வந்துள்ளது. மேலும் கிராமப்பஞ்சாயத்துகளில் அரசு திட்டமான வீடு கட்டும் திட்டத்திற்கு நிதி வழங்க பணம் வேண்டும் என்று போலியான அரசு ஆணையை அந்த வாட்ஸ்அப்பில் ஊராட்சி மன்றத் தலைவர்களுக்கும் அனுப்பி வைத்துள்ளது.
இதனால் குழம்பிப்போன ஊராட்சி மன்றத்தலைவர்கள் மாவட்ட ஆட்சியரை தொடர்பு கொண்டு இது குறித்து கேட்டபோது தான் இது குறித்த தகவல் மாவட்ட ஆட்சியருக்கு தெரிய வந்துள்ளது. மீண்டும் மீண்டும் தனது பெயரில் போலியான வாட்ஸ்அப் கணக்கு தொடங்கி பணம் பறிக்கும் செயலால் அதிர்ந்து போன மாவட்ட ஆட்சியர், தனது அலைபேசி எண்ணான அரசால் வழங்கப்பட்ட 94441-72000 என்ற எண்ணை மட்டுமே தான் பயன்படுத்தி வருவதாகவும், இந்த எண்ணை தவிர்த்து வேறு எண்ணில் இருந்து தவறான நோக்கத்துடன் வேறு குறுந்தகவல் வந்தால் அதனை நம்ப வேண்டாம் எனவும் மாவட்ட ஆட்சியர் முரளிதரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதையடுத்து மீண்டும் மீண்டும் தேனி மாவட்ட ஆட்சியர் பெயரில் போலியான வாட்ஸ்அப் பயன்படுத்தி அதன் மூலம் பணம் பறிக்கும் கும்பலை கண்டுபிடிக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்றனர், சமூக ஆர்வலர்கள்.
இதையும் படிங்க: ஆட்டோவில் வைத்து குட்கா விநியோகம்: 2 பேர் கைது