தேனி மாவட்டம் போடி அருகே உள்ள சில்லமரத்துப்பட்டியில் ஸ்டேட் பேங்க் ஏ.டி.எம். மையம் செயல்பட்டு வருகின்றது. தேவாரம் சாலையில் அமைந்துள்ள இந்த ஏடிஎம்மில் நேற்று முன் தினம்(அக்-28) இரவு அடையாளம் தெரியாத நபர் ஒருவர் பணம் எடுப்பதுபோல் உள்ளே நுழைந்து சிசிடிவியை துணியால் மூடிவிட்டு, இயந்திரத்தை உடைத்து பணத்தைக் கொள்ளையடிக்க முயன்றுள்ளார்.
அப்போது, ஏடிஎம் மையத்திலிருந்து அங்கிருந்த அலாரம் அடித்தால் பொதுமக்களிடம் மாட்டிக்கொள்வோம் என்று பயந்து கொள்ளை முயற்சியைக் கைவிட்டு அங்கிருந்து தப்பியோடினார். இதனால் இயந்திரத்தில் வைக்கப்பட்டிருந்த ரூ.15 லட்சம் பணம் தப்பியது. இது தொடர்பாக போடி பாரத ஸ்டேட் வங்கி மேலாளர் கார்த்திகேயன் அளித்த புகாரின் பேரில் போடி தாலுகா காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
ஏடிஎம் மையத்தின் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில், கொள்ளையடிக்க முயன்றது, போடி முந்தல் பகுதியில் உள்ள ஆதிதிராவிடர் காலணனியில் வசித்துவரும் ரஞ்சித்குமார்(28) என்பது தெரியவந்தது. தலைமறைவாக இருந்த அவரை போடி தாலுகா காவல் துறையினர் கைது செய்து சிறையிலடைத்தனர். ஏடிஎம் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டவரை 24மணி நேரத்தில் கைது செய்த காவல் துறையினரைப் பொதுமக்கள் பாராட்டினர்.