தேனி மாவட்டம், ஆண்டிபட்டி வட்டம், வைகை அணை அருகே உள்ள தனியார் ஆலைக்கு கரும்பு வெட்டும் பணிக்காக சில மாதங்களுக்கு முன்பு மகாராஷ்டிரா மாநிலத் தொழிலாளிகள் அழைத்து வரப்பட்டனர். குறைந்த கூலியில் பணிபுரிந்த இவர்களால், கரோனா ஊரடங்கைச் சமாளிக்க முடியவில்லை. சொந்த ஊருக்கும் திரும்ப முடியாமல் இவர்களின் குழுவிலுள்ள 80 பேர் குன்னூர் செங்குளம் கண்மாய் அருகே கூடாரம் அமைத்துத் தங்கியுள்ளனர்.
தற்போது, வெளிமாநிலத் தொழிலாளர்கள், அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்படும் சூழலில், தங்களையும் விரைந்து அனுப்பி வைக்க வேண்டும் என வருவாய் மற்றும் காவல்துறை அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தனர். அதனடிப்படையில், இன்று ஆண்டிபட்டி காவல் துணை கண்காணிப்பாளர் சீனிவாசன், ஆண்டிபட்டி வட்டாட்சியர் சந்திரசேகரன் ஆகியோர் இவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
சுமுகமான பேச்சுவார்த்தையா?
மதுரையிலிருந்து ரயில் மூலமாக மகாராஷ்டிரா செல்வதற்கு, தேனி மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இன்னும் ஓரிரு நாட்களில் அனுப்பி வைப்பதாக அலுவலர்கள் தெரிவித்தனர். ஆனால், அதனை ஏற்காத மகாராஷ்டிராவினர், தற்போதே தங்கள் பகுதிக்கு நடைபயணமாகச் செல்வதாகக் கூறி, அங்கிருந்து கிளம்பினர். அவர்களை காவல் துறையினர் தடுத்து நிறுத்தியதால், சிறிது நேரம் வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து காவல், வருவாய் மற்றும் ஆலை நிர்வாகத்தினர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை:
ரயிலில் செல்வதற்கு முன்பதிவு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஆனால், தேதி இன்னும் உறுதியாகவில்லை, ஓரிரு தினங்களில் பயண விவரம் உறுதியானதும் விரைந்து அனுப்பி வைப்பதாக உறுதியளிக்கப்பட்டது. பின்னர், மகாராஷ்டிரத் தொழிலாளர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனையடுத்து, அனைவரும் சர்க்கரை ஆலை அருகேயுள்ள பள்ளியில் தற்போது தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து மகாராஷ்டிரா தொழிலாளர்கள் கூறும்போது, 'ஊரடங்கால் வருமானம் இன்றி தவித்து வருகிறோம். அத்தியாவசியத் தேவையான எங்களது கலாசார உணவுகூட கிடைப்பதில்லை. இதை விடக் கொடுமையானது, குடும்ப உறவுகள் மரணத்திற்குக்கூட செல்ல முடியவில்லை' என வேதனைத் தெரிவிக்கின்றனர்.
ஓரிரு நாட்களில் தங்களைச் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்காவிட்டால், தாங்களாகவே இங்கிருந்து சென்றுவிடுவோம் எனத் தெரிவித்தனர்
இதையும் படிங்க: பேரிடர் நேரத்திலும் பாலிடிக்ஸ் செய்ய வேண்டாம் - மத்திய அரசுக்கு ஸ்டாலின் அட்வைஸ்!