சென்னை: போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகர் மன்சூர் அலிகானின் மகன் ஜாமீன் கோரிய வழக்கில் காவல்துறை பதிலளிக்க சென்னை போதைப்பொருள் தடுப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை ஜெ.ஜெ. நகர் காவல் நிலைய பகுதியில் சிலர் போதை பொருள் விற்பனையில் ஈடுபடுவதாக வந்த ரகசிய தகவலின் அடிப்படையில், தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிரமாக போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். அப்போது ஜெ.ஜெ. நகர் பாரிசாலை இபி பூங்கா அருகே கடந்த மாதம் போதைப் பொருள் விற்பனைக்காக வந்த அதே பகுதியைச் சேர்ந்த கார்த்திகேயன் (21) என்கிற கல்லூரி மாணவனை கைது செய்து காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தப்பட்டது. அப்போது அவரிடம் இருந்து 17 எல்.எஸ்.டி ஸ்டாம்ப் போதைப் பொருளும், மூன்று கிராம் ஓ.ஜி. கஞ்சாவையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
மேலும், விசாரணையில் ரெடிட் ஆன்லைன் செயலி மூலமாக போதைப் பொருளை வாங்கி பயன்படுத்தியும், அதிக விலைக்கு விற்பனை செய்ததும் தெரிய வந்தது. இதையடுத்து கார்த்திகேயனிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில், சென்னை மந்தைவெளியைச் சேர்ந்த அரவிந்த் பாலாஜி (20), கூடுவாஞ்சேரியைச் சேர்ந்த வத்சல் (21), மறைமலை நகரை சேர்ந்த திரிசண் சம்பத் (20), ஆருணி (20) ஆகியோரை கைது செய்தனர்.
இதையடுத்து கைது செய்யப்பட்டுள்ள முக்கிய நபரான கார்த்திகேயனிடம் ஜெ.ஜெ. நகர் போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தியதில், நடிகர் மன்சூர் அலிகான் மகன் அலிகான் துக்ளக்கும் இவருடன் தொடர்பில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து ஜெ.ஜெ.நகர் போலீசார், துக்ளக்கை டிசம்பர் 4ம் தேதி கைது செய்தனர்.
இதையும் படிங்க: யார் அந்த சார்..? மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கின் முதல் தகவல் அறிக்கையில் இருப்பது என்ன?
துக்ளக்கின் ஜாமீன் கோரிய மனுவை அம்பத்தூர் நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை அடுத்து, சென்னை போதைப்பொருள் கடத்தல் தடுப்பு நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி துக்ளக் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், தனக்கு ஜாமீன் வழங்கினால் நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனைகளை ஏற்க தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
இந்த மனு சென்னை போதைப் பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி எஸ்.கோவிந்தராஜன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில் தன்னிடம் இருந்து எந்த போதைபொருளும் காவல்துறையினர் பறிமுதல் செய்யாத நிலையில் தன்னை கைது செய்துள்ளதாகவும், இந்த வழக்கில் தனக்கு எந்தவித தொடர்பும் இல்லை எனவும் தெரிவித்தார்.
இதையடுத்து நீதிபதி, மனு தொடர்பாக காவல்துறை பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை டிசம்பர் 30ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.