தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள காமயகவுண்டன்பட்டியைச் சேர்ந்த முத்துக்குமார் என்பவரது மகன் கேப்டன் பிரபாகரன். இவர் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு சென்னை ஸ்ரீபெரும்புதூரில் உள்ள மதர்சன் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தபோது, தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த கவிதா என்னும் தனது சக ஊழியரை காதல் திருமணம் செய்துகொண்டார்.
சொந்த ஊரான காமயகவுண்டன்பட்டியில் வசித்துவந்த இத்தம்பதிக்கு நகுல் (8), ஹிரித்திக்ரோசன் (6) என்ற இரண்டு மகன்கள் உள்ளனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை குளிப்பறையில் வலுக்கி விழுந்து கவிதா இறந்துவிட்டதாக தஞ்சாவூரில் உள்ள அவரது சகோதரர் கோவிந்தராஜுக்கு கேப்டன் பிரபாகரன் தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து நேற்று காலை காமயகவுண்டன்பட்டிக்கு வந்த கோவிந்தராஜ் தனது சகோதரியின் உடலில் காயங்கள் இருப்பதைக் கண்டு சந்தேகமடைந்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனை அடுத்து, இராயப்பன்பட்டி காவல் துறையினர் விசாரணையைத் தொடங்கினர்.
இதில் கேப்டன் பிரபாகரனுக்கு குடிப்பழக்கம் இருந்ததால், அவ்வப்போது கணவன் மனைவிக்கு இடையே சண்டை ஏற்பட்டுவந்துள்ளது. இதன் தொடர்ச்சியாக நேற்று முன்தினம் கம்பத்தில் விழா ஒன்றில் கலந்துகொண்ட கேப்டன் பிரபாகரன் அளவுக்கு அதிகமாக மது அருந்திவிட்டு ஊருக்கு இருசக்கர வாகனத்தில் வரும் வழியில் கீழே தடுமாறி விழுந்துள்ளார்.
இதனால் ஏற்பட்ட காயத்துடன் வீட்டிற்கு வந்தவரிடம் கவிதா சண்டையிட்டுள்ளதாகத் தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த பிரபாகரன் கவிதாவை பலமாகத் தாக்கியதில், வீட்டிலுள்ள சுவரின் பக்கவாட்டில் போய் விழுந்துள்ளார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் வந்துள்ளது.
இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த பிரபாகரன் உடனடியாக கவிதாவை கம்பம் அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றார். ஆனால் அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார் என விசாரணையில் தெரியவந்தது.
இதனையடுத்து மனைவியை தாக்கி கொலை செய்ததற்காக பிரபாகரனை இராயப்பன்பட்டி காவல் துறையினர் கைதுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர். மேலும் உயிரிழந்த கவிதாவின் சடலத்தைக் கைப்பற்றி உடற்கூறாய்விற்காக கம்பம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.